• Mon. Mar 27th, 2023

சேரன் பிறந்த நாள் ஸ்பெஷல்

Byமதி

Dec 12, 2021

எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தனி ஒரு ஆளாக, எந்த துணையும் இல்லாமல் அவரவர் துறையில் கிடைக்கும் வெற்றி சாதாரணமானது அல்ல. அதுவும் திரைத்துறையில் கிடைக்கும் வெற்றி எவ்வளவு எளிதானது அல்ல. ஒரு சாதாரண திரையரங்க ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டரின் மகனாக பிறந்து, தனது கடின உழைப்பால் இன்று தேசிய அளவில் தனது படைப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்ட கலைஞன் தான் இயக்குனர் நடிகர் சேரன். அவர் தனது 49ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.

மதுரைக்கு அருகே பழையூர்ப்பட்டி எனும் கிராமத்தில், எளிய குடும்பத்தில் பாண்டியன் கமலா தம்பதியருக்கு பிறந்தார். இவரது தந்தை வெள்ளலூர் தியேட்டர் ஒன்றில் ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டராக பணியாற்றியுள்ளார். இவரது தாய் ஆரம்பகால பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். தந்தை தியேட்டர் ப்ரொஜெக்டர் ஆப்ரேட்டர் என்பதால் சிறுவயது முதலே பல படங்களை பார்க்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. இது சேரனுக்கு தன்னை அறியாமலே நடிப்பின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறுவயது முதலே நாடங்களில் நடித்துள்ளார்.

பின்னர், திரையுலக கனவுகளுடன் சென்னைக்கு வந்த இவர் ஒரு தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். தன்னைப்போலவே திரைப்படத் துறையில் சாதிக்க வேண்டும் என்று சென்னைக்கு வந்த கே.எஸ்.ரவிகுமாரிடம் ‘புரியாத புதிர்’ படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றத் தொடங்கியவர் ‘சேரன் பாண்டியன்’, ‘நாட்டாமை’ படங்களில் துணை இயக்குநராகப் பதவி உயர்வு பெற்றார்.

1997ல் ‘பாரதி கண்ணம்மா’ சேரன் எழுதி இயக்கிய முதல் திரைப்படம். தலைசிறந்த படைப்பாளி ஒருவரின் வருகைக்கு எடுத்துக்காட்டாய் அமைந்த படம். ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்ட படம்.

மாற்றுத் திறனாளியின் பிரச்சினையை பறை இசையுடன் ஒலிக்கச் செய்த ‘பொற்காலம்’ (1997), அரசியல்வாதிகளின் முகத்திரையை தோலுரித்த ‘தேசிய கீதம்’ (1998), வேலையின்மையை நெற்றிப்பொட்டில் அடித்தார் போல் காட்டிய ‘வெற்றிக்கொடி கட்டு’ (2000), குடும்பம், பாசம், நட்பு, காதல் என ‘பாண்டவர் பூமி’ (2001) எனத் தொடர்ந்து தரமான அளித்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

தமிழ் சினிமா ரசிகர்களால் பட்டிதொட்டி எல்லாம் கொண்டாடப்பட்ட படம்
‘ஆட்டோகிராப்’ (2004). ஒரு மனிதன் கடந்துவந்த பாதையை எதார்த்தம் மாறாமல் கொடுத்த படம். இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றி ஒவ்வொருவரும் இந்த படத்தை தனது வாழ்க்கையுடன் தொடர்புபடுத்தி பார்ப்பதே.

’தவமாய் தவமிருந்து’ (2005) சேரனை தேசிய அளவில் கவனம் ஈர்த்தன. கிராமத்து உழைப்பாளி தந்தைகளின் வலிகளையும் தியாகங்களையும் ரத்தமும் சதையுமாக உலவிவட்ட காவியப் படைப்பு. தாயின் பாசத்தை மட்டுமே பேசிவந்த திரை உலகம் தந்தையின் பாசத்தை பேசவைத்தவர்.

தொடர்ந்து ‘மாயக் கண்ணாடி’ (2007), ‘பொக்கிஷம்’ (2009), ‘ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை’ (2015), ‘திருமணம்’ (2019) ஆகிய படங்களிலும் தன் தனித்துவ முத்திரையை வெளிப்படுத்தினார் சேரன்.

இயக்குனராக மட்டுமின்றி, நடிகராகவும் ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவர் சேரன். தங்கர் பச்சான் இயக்கிய ‘சொல்ல மறந்த கதை’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமான சேரன் ரசிகர்கள், விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றார். அவரே இயக்கித் தயாரித்த ‘ஆட்டோகிராப்’ ‘தவமாய் தவமிருந்து’ படங்களில் சேரன் நடித்த ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான நபராக ஆக்கியது.

கரு.பழனியப்பனின் ‘பிரிவோம் சந்திப்போம்’, மிஷ்கினின் ‘யுத்தம் செய்’, வசந்தின் ‘மூன்று பேர் மூன்று காதல்’ என முக்கியமான இயக்குநர்களின் படங்களில் நாயகனாக நடித்தார் சேரன். தன் ஒரு சிறந்த நடிகன் என்பதை இந்த படங்கள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபித்தார்.

தொடர்ந்து நடிகராகவும் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் இயங்கிக் கொண்டிருக்கும் சேரன், சரத்குமாரின் நூறாவது திரைப்படமான ‘தலைமகன்’ படத்துக்குத் திரைக்கதை எழுதினார். ’மிக மிக அவசரம்’ படத்தின் மூலம் பாடலாசிரியரானார்.

இவர் இந்திய அரசின் தேசிய விருதினை 2000-ஆம் ஆண்டின் “வெற்றி கொடி கட்டு” திரைப்படத்திற்கும், 2004-ஆம் ஆண்டு “ஆட்டோக்ராப்” திரைப்படத்திற்கும், 2005-ஆம் ஆண்டு “தவமாய் தவமிருந்து” படத்திற்கு தேசிய விருது பெற்று உள்ளார்.

இவர் தமிழக அரசின் திரைப்பட விருதினை 8 முறை சிறந்த திரைப்படம், சிறந்த வசனம் மற்றும் எழுத்தாளர், சிறந்த இயக்குனர் என்ற பல துறைகளில் விருதுகளை வென்றுள்ளார். பின்னர் பிலிம் பேர் விருதுகளை ஐந்து முறை வென்றுள்ள இவர், திரைப்படங்களை சார்ந்த பல தரப்புகளில் உள்ள பலர் விருதுகளை வென்றுள்ளார்.

சேரன் இன்னும் பல தரமான படங்களை இயக்கி, பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து, மேலும் பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற வேண்டும் என்று அவருடைய பிறந்த நாளான இன்று மனதார வாழ்த்துவோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *