• Fri. Apr 19th, 2024

தன்னம்பிக்கை நாயகன் ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் என்கிற இரு இமயங்கள் நடிப்பு துறையில் இருந்து எம்.ஜி.ஆர் அரசியலுக்கும்சிவாஜி வயதுக்கேற்ற வேடத்தில் நடிக்க தொடங்கியபின்னர் ரஜினிகாந்த், கமலஹாசன் என்கிற இரு இளைஞர்கள் அந்த சிம்மாசனத்தில் அமர்ந்தார்கள் அந்த சிம்மாசனத்தில் அமர அஜீத்குமார், விஜய் என இருவரும் இன்றுவரை காத்திருக்கின்றனர்.
இருவரும் பல்வேறு வணிகரீதியாக பல வெற்றிகளை அடைந்திருந்தாலும் கமலஹாசன் என்கிற நடிப்பு அசுரன் இடத்தை இந்த இருவருக்கும்எட்டிப் பிடிக்க முடியாத எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது

ரஜினிகாந்த்தை வணிகரீதியாகவும், வசூல் அடிப்படையிலும் இருவரும் பல முறை இந்தியாவில் வென்று இருக்கிறார்கள் ஆனால் வெளிநாட்டில் இன்றுவரை வசூல் சக்கரவர்த்தி என்கிற நாற்காலியை ரஜினியிடம் இருந்து இவர்கள் இருவராலும் கைப்பற்ற முடியவில்லை

இன்று நடிகர் ரஜினிகாந்த்தின் 71 வது பிறந்தநாள் இந்த வயதிலும் கதாநாயகனாக நடித்து வரும் நடிகர் ரஜினிகாந்த் என்பது அவரது வசீகரத்துக்கும், கடின உழைப்புக்கும் தமிழக மக்கள் தந்த பரிசு அவரிடம் இன்றைய நடிகர்கள்
கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் எவற்றையெல்லாம் இன்றைய நாயகர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது.

இன்றைய நாயகர்கள் பொய்யான புகழ் வார்த்தைகளுக்கு மனதை பறிகொடுத்து புளகாங்கிதம் அடைந்து, அடுத்தடுத்துக் கிடைக்கும் சில வெற்றிகளுக்குப் பிறகு சென்னை ஜெயின் ஜார்ஜ் கோட்டையைக் குறிவைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இகழ்ச்சியும் ஏளனமும் அவமானமும் மட்டுமல்ல, கடுமையான விமர்சனமும்கூட அவர்களுக்குக் காயத்தையே ஏற்படுத்துகிறது. இதுவே இவர்களைக் குறித்த கிசுகிசுக்களும் வதந்திகளும் அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியாகக் காரணமாகின்றன

ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே ரசிக்கும் நடிகர் என்ற பெயர் ரஜினிக்கு உண்டு. பில்லா, முரட்டுக்காளை படங்கள் வெளியான பின்பு இது தொடர்ந்ததாகக் கூறப்படுவதுண்டு. இந்த விமர்சனத்தைத் தலைகீழாக மாற்றி குடும்பத்தினர் அனைவரையும், தனது படத்தின் மூலமாக ‘அய்’ என்று ஆச்சர்யப்பட வைத்து கல்லா கட்டியவர்ரஜினிகாந்த்.

ரஜினிக்கு நகைச்சுவை நடிப்பு வராது என்று விமர்சனம் வெளியான காலகட்டத்தில், குருநாதர் பாலசந்தர் இயற்சியதில்லுமுல்லு படத்தில் காமெடியில் கலக்கினார் ஆனாலும், தம்பிக்கு எந்த ஊரு படம்தான் ரஜினியின் கமர்ஷியல் ராஜபாட்டைக்கு நிரந்தர பாதை அமைத்து கொடுத்து முற்றிலுமாக மாற்றியது.

பாடல், சண்டைக்காட்சிகள், காமெடி, காதல், சென்டிமென்ட் என்று எல்லாம் கலந்த கமர்ஷியல் படங்களில் ரஜினி தொடர்ந்து நடித்தார் அதில் உச்சம் தொட்டவை அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா, முத்து, 2.0 போன்ற படங்கள்

‘உத்தமபுத்திரன்’ படத்தில் வரும் சிவாஜி கேரக்டரின் ஸ்டலை இமிடேட் செய்தே காலத்தை ஓட்டிவிட்டார் என்பது ரஜினிகாந்த் மீது இன்றுவரை இருக்கும் குற்றச்சாட்டு. அது உண்மையா, இல்லையா என்ற விவாதத்துக்குள் செல்லத் தேவையில்லை. சிவாஜி கணேசனே தனது உத்தமபுத்திரன் பட பாத்திரத்தை ஓரிரண்டு முறைகளுக்கு மேல் செய்திருக்க முடியாது என்பதே உண்மை.

ஒருமுறை சென்ற பாதை வழியே அடுத்த முறை செல்வது போரடிக்கும் என்றாகிப்போன காலத்தில், வணிக பார்முலா என்ற எல்லைக்குள் ஒவ்வொரு முறையும் ரசிகனின் உற்சாகம் குறையாமல் திரைப்படங்கள் தருவதற்கு ஒவ்வொரு நடிகரும் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு கலை. ரஜினிகாந்த் நடித்ததில் சுமார் 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ரகம்தான் என்பது ஆச்சர்யத்துக்குரியது.

ரஜினிஅறிமுகமான முதல் படமானஅபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி ஒரு கேட்டைத் திறந்தவாறே நுழைவார். ஒரு புதுமுகத்துக்கு இது அசத்தலான அறிமுகம்தான். ஆனால், அந்த காட்சியில் சுருதி பேதம் என்ற எழுத்துகள் தோன்றி மறையும். எதிர்மறையான இந்த வார்த்தைகள், ஒரு கலைஞனின் அடுத்த கட்ட கனவுகள் குறித்த எதிர்மறை அபிப்பிராயங்களையே உருவாக்கும். அந்த சென்டிமெண்டை சுக்குநூறாக்கின தனது வெற்றிகள் மூலம் இன்றுவரை பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துவருபவர் ரஜினிகாந்த்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்குப் பிடித்த நடிகர் என்று ரஜினிகாந்தைக் குறிப்பிடுவார். எந்திரன், 2.O பட விழாக்களில் மட்டுமல்லாமல் சில பேட்டிகளிலும் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ரஜினி என்பவர் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான ஒரு முன்னுதாரணம். இதனைப் படிக்கையில், வெற்றி பெற்றவர்களைப் பற்றி இப்படி புகழ் பாடுவது ஒரு வழக்கமாகத் தொடர்கிறது என்ற சலிப்பு வரலாம். ஆனால், சற்றுக் கூர்ந்து பார்த்தால் இதிலுள்ள உண்மை விளங்கும்.

‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது, ‘இவனுக்கெல்லாம் நடிப்பே வராது; ஜெய்கணேஷைக் கூட்டிட்டு வாங்க’ என்று ரஜினிகாந்த் கண்ணெதிரிலேயே ஷூட்டிங்கை கேன்சல் செய்தார் இயக்குநர் கே.பாலசந்தர். இயக்குநர்கள் சங்க 40ஆவது ஆண்டு விழா நடைபெற்றபோது, பாலசந்தரே வெளிப்படுத்திய தகவல் இது இதைச் சொன்னபோது, அவருடன் மேடையில் ரஜினிகாந்தும் இருந்தார்.

அதே பாலசந்தர்தான் அதற்கடுத்த சில ஆண்டுகளில் ரஜினிகாந்தை வைத்து நெற்றிக்கண் என்ற படத்தைத் தயாரித்தார். அண்ணாமலை, முத்து போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஆனபோது, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகி மனஅமைதிக்காக இமயமலை செல்லத்தொடங்கிவிட்டார்.

இயக்குநர்கள் சங்க 40ஆவது ஆண்டுவிழா மேடையில் பாலசந்தர் ரஜினிகாந்தைப் பேட்டி கண்டார். அப்போது, அவரது பேச்சைக் கேட்பதற்காக அவரை நோக்கி தனது நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டு அமர்வார் ரஜினி. தனது உடல்மொழியிலேயே பாலசந்தர் பேச்சைக் கர்ம சிரத்தையோடு கேட்கும் தொனி வெளிப்படும். ஒரு பள்ளிக்கூட மாணவன் தனது வகுப்பு ஆசிரியர் முன்னால் இருப்பது போல இருபது நிமிடங்களுக்கும் மேலாக உட்கார்ந்திருந்தார்.

உன்னிடம் உனக்குப் பிடித்த விஷயம் எது என்று பாலசந்தர் கேட்டபோது, உண்மையைப் பேசுவது என்று தெரிவித்தார். இந்த குணமே அவரைச் அரசியல் வட்டாரத்தில்சில சிக்கல்களில் தள்ளியது என்பதையும் மறுக்க முடியாது.சிலமணி நேரங்கள் தூங்கிவிட்டு அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது, விமானப் பயணங்களில் உடை மாற்றிக்கொள்வது என்று ரஜினிகாந்த் பிஸியாக இயங்கிய காலம் ஒன்று உண்டு. அதிலிருந்து முற்றிலுமாக விலகி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூன்று மாத காலம் மட்டும் அவர் படத்தில் நடித்ததும் உண்டு.

திட்டமிட்டோ, திட்டமிடாமலோ இப்படியொரு காலகட்டம் எல்லாக் கலைஞர்களின் வாழ்க்கையிலும் வரும். அதனை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும்.ரஜினியைப் பற்றிப் புகழ்பவர்கள் அத்தனை பேருமே அவரது எளிமையை, நட்பு பாராட்டும் குணத்தை, வெளிப்படைத் தன்மையைப் பாராட்டுவார்கள்.

ரஜினியின் உடல்மொழியில் இருக்கும் தனித்துவமான ஸ்டைலைப் போலவே, இதுபோன்ற சில நற்குணங்களும் அவரது சினிமா வாழ்வைத் தாங்கிப் பிடித்துள்ளது.கருணாநிதி என்ற ஒற்றைப் பெயர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக இருந்தது. அதேபோல, சுமார் 50 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவின் போக்கைத் வணிகரீதியாகதிசை மாற்றுபவராக இருந்து வந்திருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். புதிய வணிக வழிகளை தனது படம், புகழ் மூலம் ஏற்படுத்திக்கொடுத்தவர்

உலகின் எந்த மூலையில் இருக்கும் நடிகரும்,தன்படங்களைரசிப்பவர்களுக்காகத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்றுவதில் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால், அதில் ரஜினிகாந்த் காட்டும் ஈடுபாடும் சிரத்தையும்தான் இன்றுவரை அவரது அடையாளத்தை, வணிகத்தை, வசூல் கணக்கை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

கபாலி, காலா படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்துடன் அவர் இணைந்தபோது, பெரிதாகச் சிலாகித்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். அதுபோலவே பேட்ட படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என்று மூன்றாம் தலைமுறை இளம் கலைஞர்களோடு கைகோர்திருக்கிறார்.

பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பலரும், தன்னை ரஜினியின் ரசிகர் என்று சொல்லிக்கொண்டனர். ஒரு புன்சிரிப்பைத் தவிர அவரது முகத்தில் வேறெந்தச் சலனமும் இல்லை. தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையை ஓரம்வைத்துவிட்டு, இளம் கலைஞர்களது தோளோடு தோள் சேர்ந்து நிற்கத் தன்னம்பிக்கை வேண்டும். அது ரஜினியிடம் நிரம்பவே இருந்தது, இப்போதும் இருக்கிறதுஈகோ இல்லாமல் வளரவே முடியாது என்பது போன்ற தவறான கற்பிதங்களுடன் வாழும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இது.

அமிதாப்பச்சன் தனது வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்ததுபோல இனிவரும் காலங்களில் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடித்துபுது வகையான சினிமா அனுபவத்தைத் தர வேண்டும் என்றுதற்போதைய சினிமா ரசிகன் எதிர்பார்க்கிறான் இதனைஅவர் தொடங்கிவைத்தால் இந்தியாவிலுள்ள மற்ற மொழி சினிமாக்களிலும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும்.

தமிழக அரசியலில்தன்னம்பிக்கை என்ற சொல்லின் உதாரணம் மு.கருணாநிதி சினிமாவில் நிகழ்கால உதாரணம் ரஜினிகாந்த். பாபா தோல்விக்குப் பிறகு ரஜினிகாந்த் அவ்வளவுதான் என்று கூறியவர்களுக்கு மத்தியில் சந்திரமுகி வெற்றியின் மூலம்கீழே விழுந்த குதிரை மீண்டும் எழுந்ததாக பொதுமேடையில் பகிரங்கமாக அறிவித்தவர் ரஜினிகாந்த்அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள தமிழ் சினிமா நடிகர்களுக்கு மட்டுமல்ல, சாமான்யர்களுக்கும், சாதிக்க போராடுபவர்களுக்கும் ஏராளமாக இருக்கின்றன. ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுமே கதாநாயகன்தான் என்ற எண்ணத்தை விதைத்தது ரஜினிகாந்த்தின் சினிமா போராட்டம், வெற்றிகள். அந்த வகையில் ரஜினியின் வாழ்க்கை அனுபவங்களை கேட்டுச் சிலிர்ப்பது என்பது ஒரு தலைமுறையின் சுயபுராணம்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *