திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதாக பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் கோயில் மலையைப் பாதுகாக்கக் கோரி இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத்து பிப்.3, 4-ம் தேதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. அதனால், திருப்பரங்குன்றத்துக்கு உள்ளூரில் இருந்து மட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்தும் இந்து அமைப்பினர், பாஜகவினர் வருவதைத் தடுக்க மாவட்ட எல்லைகளின் அனைத்துச் சாலைகளிலும் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
மதுரை மாநகர காவல் ஆணையர் ஜெ.லோகநாதன் தலைமையில் துணை ஆணையர்கள் இனிகோ திவ்யன், அனிதா, வனிதா, ராஜேஸ்வரி, வெளிமாவட்ட எஸ்பிக்கள் மயில்வாகனன், தங்கத்துரை உள்ளிட்ட 5 எஸ்பிக்கள் மற்றும் 2300-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். அத்துடன் திருப்பரங்குன்றம் கோயிலைச் சுற்றிலும் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும் .திருப்பரங்குன்றத்துக்கு வெளியூரிலிருந்து வாகனங்கள் செல்லவும் அனுமதி மறுக்கப்பட்டது .
இந்த நிலையில், தெப்பத் திருவிழா நடப்பதால் முருகனுக்கு காவடிகள் எடுத்தும், உடலில் அலகுகள் குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் வந்தனர். இதைப் பயன்படுத்தி பாஜக, இந்து முன்னணி அமைப்பினர் பக்தர்கள் போல வேடமணிந்து போலீசாரை ஏமாற்றி திருப்பரங்குன்றம் கோயில் வளாகத்துக்குள் நேற்று நுழைந்தனர். அவர்கள் அன்னதானக் கூடத்தில் ஆர்ப்பாட்டம் செய்தனர். பாஜக கொடியைக் காட்டியும் முழக்கங்களை எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி வெளியேற்றினர். அதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருப்பினும் போலீசார் அவர்களை கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்து பின்னர் விடுவித்தனர்.
இந்த நிலையில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் நேற்று அத்துமீறி நுழைந்து போராட்டம் நடத்தியதாக 195 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பாஜக, இந்து முன்னணியைச் சேர்ந்த 195 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.