• Sat. Jun 6th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

திமுக மக்களுக்கான எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை- சசிகலா பேச்சு..,

Byமுகமதி

Apr 15, 2026

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்தின் கூட்டணியில் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் போட்டியிடும் த. புஷ்பராஜ் என்பவருக்கு வாக்குகள் சேகரிப்பதற்காக புதுக்கோட்டை அடுத்த ஆலங்குடி வடகாடு முக்கம் என்ற இடத்திற்கு அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனர் வி.கே.சசிகலா வந்து வாக்குகள் சேகரித்தார்.

அவரது கட்சியை சேர்ந்த தொண்டர்களுடன் வாகைத் தமிழர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோருக்கு மத்தியில் வேனுக்குள் இருந்தபடியே உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில்…
இந்த தேர்தல் கட்சிகளுக்கு இடையேயான போட்டி என்று பலர் சொல்கிறார்கள். ஆனால் மக்கள் தங்களது ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்ற தேர்தலாக நடக்கிறது என்று நான் நினைக்கிறேன்.

திமுக இந்த ஐந்தாண்டுகளில் வாங்கிய கடன் 12 லட்சம் கோடி. அந்த பணத்தை வாங்கி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒவ்வொருவர் தலையிலும் இரண்டு லட்ச ரூபாய் கடன் வாங்கி வைத்திருக்கிறார்கள். திமுக அரசாங்கம் கிராம பகுதிகளில் உள்ள பாலங்களை புதுப்பிக்க மாட்டார்கள். மக்கள் பயன்படும் வகையில் செய்து தர மாட்டார்கள். ஆனால் வெறும் மேம்பாலங்களாக கட்டுவார்கள். காரணம் அதில்தான் நிறைய கொள்ளை அடிக்க முடியும்.

தேர்தலுக்கு ஓட்டு கேட்டு வரும் போது ஒரு தரப்பினர் டோக்கன் தருகிறேன் என்பார்கள். இன்னொரு தரப்பினர் பிரிட்ஜ் தருவோம் என்பார்கள். இன்னொரு தரப்பில் பணம் தருவோம் என்பார்கள். இதெல்லாம் அவர்களது சொந்த பணம் அல்ல கடன் வாங்கித்தான் தருவார்கள். இதையெல்லாம் உங்களிடம் சொல்வதற்காக தான் தனியாக கட்சி தொடங்கி இப்போது உங்களிடம் வந்து பேசிக் கொண்டிருக்கிறேன்.

பாவப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வதற்காகவே புரட்சித்தலைவர் எம்ஜிஆரும் புரட்சித்தலைவி அம்மாவும் இருந்தார்கள். போலவே நானும் பாவப்பட்ட மக்களுக்கு நல்லது செய்வதற்காக தான் வந்திருக்கிறேன். தான் யாருடனும் கூட்டணி கிடையாது மக்களாகிய உங்களுடன் தான் கூட்டணியாக இருக்கிறேன். நீங்கள் நினைத்தால் தமிழ்நாட்டை மாற்றி காட்ட முடியும் என்று நம்புகிறேன். இரண்டு கட்சிகளின் வாக்குறுதிகளை பார்த்தால் தலையை சுற்றுகிறது. ஏற்கனவே கல் மணல் என அனைத்து வளங்களும் விற்கப்பட்டு விட்டன. டாஸ்மாக்கிலும் பிளாக்கில் விற்பதால் அரசாங்கத்துக்கு வருமானம் வரவில்லை.

கனிம வளத்திலிருந்தும் அரசாங்கத்துக்கு வருமானம் வரவில்லை தனியாருக்கு தான் போகிறது. வரி என்கிற பெயரில் உங்களிடமிருந்து ஒவ்வொருத்தரிடம் இருந்தும் மாதம் 6 ஆயிரம் 7 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார்கள்.

அந்த பணத்தை வாங்கித்தான் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பது தான் தமிழ்நாட்டு அரசாங்கத்தின் உண்மையான நிலைமை.
ஜெயலலிதா ஆட்சியின் போது இருந்த மின் கட்டணத்தை போல இப்போது இரண்டு மடங்கு உயர்ந்து விட்டது. மக்களுக்கு ஆயிரம் ரூபாய் தருகிறேன் 2000 ரூபாய் தருகிறேன் என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் செயல். இப்போது தமிழ்நாடு முழுவதும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டு விட்டது. மக்கள் குடிநீருக்காக அலைகிறார்கள் என்றார். தொடர்ந்து அவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று தேர்தல் அறிக்கையையும் விளக்கினார்.