9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் மாநில தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 27 மாவட்டங்களில் மட்டும் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. எஞ்சிய 9 மாவட்டங்களில் வார்டு வரையறை பணிகள் முடிவடையாததால் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்நிலையில் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அதை செயல்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. 9 மாவட்ட திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி, ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக செப்டம்பர் 6ம் தேதி அனைத்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் கிரிராஜன், சுந்தர், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், பாஜக சார்பில் கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ் உள்ளிட்ட 11 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.