• Sat. Apr 27th, 2024

#Exclusive சசிகலா, ஸ்டாலின் Vs ஓபிஎஸ் – இபிஎஸ் உண்மையை ஓபனாக போட்டுடைத்த தங்க தமிழ்ச்செல்வன்!

Thanga tamilsevan

சசிகலாவின் கணவர் சென்னையில் இறந்த போது, பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில்; இருந்து கதறியபடியே பறந்து வந்தார் சசிகலா. அன்று எங்கு சென்றார்கள் ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும். சென்னையில்தானே இருந்தார்கள். அரசியல் நாகரிகம் கருதி துக்கம் விசாரிக்கச் செல்லாமல் அமைதியாக புறமுதுகை திருப்பிக் கொண்டு சென்றனர். ஆனால், சசிகலாவும், அண்ணன் தளபதியும் அப்படி இல்லையே! என்று தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் நம் அரசியல் டுடேவிற்கு பிரத்யேகப் பேட்டி கொடுத்திருப்பதுதான் ஹைலைட்டே!

ஊடகங்களில் தற்போது பரபரப்பான பேசுபொருளாக மாறியிருக்கும் கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி கைது செய்யப்படுவார் என்ற பேச்சு அடிபடுகிறதே? அது உண்மையா?

எடப்பாடி கைதாகிறாரா இல்ல மற்றவங்க கைதாகிறாங்களான்னு விசாரணையில தெரிய வரும். தி.மு.க தலைவர், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலினுடைய செயல்பாடுகளெல்லாம் அரசியல் ரீதியாக பழிவாங்கக் கூடிய செயல்கள் அல்ல. ஒரு ஆரோக்கியமான சட்டமன்ற நிகழ்வுகள் நடந்துட்டு இருக்கு. எனக்கு தெரிஞ்சு நான் மூன்று தடவை எம்.எல்.ஏ வாக பணியாற்றி இருக்கிறேன். ஒரு ஆரோக்கியமான சட்டமன்ற நடைமுறைகளை நான் இன்றைக்குத்தான் பார்த்திருக்கிறேன். அண்ணன் தளபதி தலைமையில இருக்கிற அரசுலதான் பார்க்கிறேன். யாரையும் பழிவாங்கும் நோக்கம் இல்லை. தேர்தல் அறிக்கையில் தி.மு.க தலைவர் அண்ணன் தளபதி தமிழ்நாடு முழுவதும் சொல்லியிருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை வழக்குகளில் உண்மையான குற்றவாளிகள் யார் என்று கண்டுபிடிக்கப்படுவர்கள் என்று அன்றே தேர்தல் பிரச்சாரத்தின் போது எங்கள் தளபதி மக்களுக்கு சூளுரைத்தார். இன்றைக்கு வெற்றி பெற்று விட்டோம். முன்னாள் முதலமைச்சர் வீட்டுல கொள்ளை, கொலை நடந்திருக்கிறது. தொடர்ச்சியா மூணு பேர் விபத்துல இறந்திருக்காங்க. இதெல்லாம் கண்டுபிடிப்பதற்கு உண்டான விசாரணை ஊட்டி நீதிமன்றத்துல நடந்து கொண்டிருக்கிறது. நிச்சயமாக விசாரணையின் முடிவில் யார் தவறு செய்தார்களோ, அவர்கள் நூறு சதவீதம் தண்டிக்கப்படுவார்கள். இது காலத்தின் கட்டாயம்.

அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு நடத்தப்படுவது, கொடநாடு வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்தது எல்லாம் அதிமுகவை பழிவாங்கும் செயல் என்று அ.தி.மு.க தரப்பில் தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதே? அதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பழிவாங்கும் படலம் என்றால் ஆட்சியில் அமர்ந்த அடுத்த நாளே எல்லோரையும் தூக்கி உள்ள வச்சிட்டு போயிருக்கலாமே. அந்த நோக்கம் எங்களுக்கு இல்ல. ஒரு ஆரோக்கியமான அரசியலை, மக்களுக்கு வேண்டிய திட்டங்களை கொடுத்து, அரசியல் நிர்வாகத்தை நன்றாக கொண்டு செல்ல வேண்டும் என அண்ணன் தளபதி நினைக்கிறார். திடீரென்று முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் வேலுமணி 15 கம்பெனிய தொடங்கியிருக்கிறார். கம்பெனி தொடங்கிறதுக்கு 1 லட்சம், இரண்டு லட்சம் போட்டிருப்பதாகச் சொல்றாங்க. 4 வருஷத்துல, அதன் மூலமா 800 கோடி, 1000 கோடி வருமானம் வந்திருக்கிறது என்று சொன்னால், அது நடைமுறைக்கு எப்படி சாத்தியமாகும். இதை வருமான வரித்துறை கண்டுபிடிச்சிருக்காங்க. இதற்கு தி.மு.க அரசு பொறுப்பல்ல. அத கண்டுபிடிச்சு, நீங்க உண்மையிலேயே 4 வருஷத்துல ஆயிரம் கோடி சம்பாதிப்பதற்கு உண்டான வழிவகைகள் என்ன என்று கேட்கிறாங்க. நியாயம் என்றால் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தவறு என்றால் தண்டிக்கத்தானே செய்ய வேண்டும். இதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று சொன்னால் நாங்கள் அதை எப்படி ஒத்துக் கொள்ள முடியும். எங்களுக்கு அது நோக்கமல்ல. தி.மு.க அரசு மீது அ.தி.மு.க தவறான குற்றச்சாட்டை முன் வைக்கிறது. பழிவாங்கும் செயல் என்றால், நிறைய பேர் சிறையில்தான் இருக்கணும். அந்த மாதிரி இல்லை. வெளிப்படைத்தன்மையோட அண்ணன் தளபதி ஆட்சி நடந்துகிட்டு இருக்கு. தி.மு.க அரசின் செயல்பாடுகளை மக்கள் பாராட்டுகிறார்கள்.

சசிகலா மீண்டும் அதிமுகவை கைப்பற்ற ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா?

சசிகலா மீண்டும் அ.தி.மு.க.வை கைப்பற்றுவாங்களா என்று எனக்குத் தெரியவில்லை. மரியாதைக்குரிய முன்னாள் முதல்வர் அண்ணன் ஓ.பன்னீர்செல்வம் மனைவி திருமதி.விஜயலட்சுமி இறந்தாங்க. நானும் சென்றிருந்தேன். அண்ணன் தளபதி ஸ்டாலின் சென்னையில் விசாரிச்சாங்க. அமைச்சர்களை அனுப்பி துக்கம் விசாரிக்க வச்சாங்க. இன்றைக்கு சசிகலாவும், தினகரனும் வந்து துக்கம் விசாரிச்சுட்டு போறாங்க. சென்னையில சசிகலாவின் கணவர் நடராஜன் இறந்த போது, அ.தி.மு.க தரப்புல இருந்து யாராவது போய் விசாரிக்கணும்ங்கிற எண்ணம் இருந்துச்சா. இதை நான் அரசியல் ரீதியாகப் பேசவில்லை. மனிதாபமான அடிப்படையில் பேசுகிறேன். சென்னையிலதான் அனைவருமே இருக்கீங்க. யாராவது போய் துக்கம் விசாரிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்ததா? இல்லையே!. இன்றைக்கு அனைவரும் வந்து ஓ.பி.எஸ் வீட்டுல வந்து விசாரிக்கிறார்களே. அன்றைக்கு நீங்க அதுபோல செய்திருந்தீர்கள் என்றால், நாங்கள் பெருந்தன்மையாக அதை நம்புவோம். ஒரு சூழ்ச்சியின் வலையில்தான் அ.தி.மு.க இருந்தது என்பது நிரூபணமாகியிருக்கிறது. அதனால்தான் அவர்கள் போய் துக்கம் விசாரிக்கவில்லை. அண்ணன் தளபதி பெருந்தன்மையோடு இருக்கிறார். துக்கத்தை விசாரிப்பதற்கு முதல் நபராக வீட்டிற்கு ஓடோடிச் சென்றார். மூன்று அமைச்சர்களை அண்ணன் ஓ.பி.எஸ் இல்லத்திற்கு அனுப்பி துக்கம் விசாரிக்க வச்சாங்க. இச்செயலை நான் பெருந்தன்மையோடு அண்ணன் தளபதியைப் பாராட்டுகிறேன்.

ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வாய்ப்பு உங்களுக்கு கொடுக்கப்படாதது ஏன்?

திராவிட முன்னேற்றக் கழகம் என்பது மிகப்பெரிய கட்சி. நான் பதவியை எதிர்பார்த்து தி.மு.க.வில் இணையவில்லை. என்னை விட சீனியர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். தி.மு.க தலைவர் அண்ணன் தளபதி பெருந்தன்மைக்குச் சொந்தக்காரர், நல்ல மனசு இருக்கு, இரக்க குணம் இருக்கிறது. அத நான் உண்மையிலேயே பாராட்டுகிறேன். தி.மு.க வெற்றி பெற்ற பிறகு, அண்ணன் தளபதி என்னை சென்னைக்கு அழைத்தார்கள். தற்போது, சட்டசபை நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாதிரி நேரத்தில், நான் போய் நின்றால் ஏதோ பதவிக்காக வருவதாக தப்பாக நினைத்து விடுவார்கள் என்று நான் எனது சொந்த ஊரிலேயே இருக்கிறேன். பதவி என்பது அண்ணன் தளபதி பார்த்து யாரை முடிவு செய்கிறாரோ அவர்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்குத்தான் கிடைக்கும், உனக்குத்தான் கிடைக்கும் என்று யூகிக்க முடியாது. இது பெரிய கட்சி. வாய்ப்பு கிடைக்கும் போது கொடுப்பாரு. அத நாம பயன்படுத்துவோம் என்று பெருந்தன்மையோடு தனது பேட்டியை தங்கதமிழ்ச்செல்வன் புன்னகையோடு நிறைவு செய்தார். வீடியோ இதோ..

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *