திருவள்ளூர் மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு பொற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு அடுத்த கீழசேரியில் அரசு உதவி பெறும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி விடுதியில் தங்கி பிளஸ் 2 படித்து வந்த திருத்தணியை சேர்ந்த சரளா என்ற மாணவி நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார், மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மாணவியின் திடீர் மரணம் தொடர்பாக, உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில், இன்று காலை மாணவியின் உடற்கூராய்வு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் துவங்கப்பட்டு, பகல் 12 மணி அளவில் முடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவியின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்க காவல்துறையினர் ஏற்பாடு செய்தனர்.ஆனால், மாணவியின் பெற்றோர், ‘மாணவியின் தற்கொலைக்கான காரணத்தை உடனடியாக சொல்ல வேண்டும்’ என வலியுறுத்தி, உடலை வாங்க மறுப்பு தெரிவித்து வந்தனர்.சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் காவல்துறையினர் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி மாணவியின் உடலை அவரது சகோதரர் மற்றும் உறவினரிடம் ஒப்படைத்தனர். இதனைத் தொடர்ந்து, மாணவியின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் அவரது சொந்த கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.