திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியைச் சேர்ந்த பெண்ணை காதலித்து பதிவுத் திருமணம் செய்துள்ளார். பெண் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் சகோதரரை புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன் மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது.

காதல் விவகாரத்தில் இளைஞரை கடத்தியதாக கே.வி. குப்பம் எம்.எல்.ஏ பூவை ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைதாகியுள்ளனர். மேலும் பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன் மூர்த்தி வீட்டில், அவரை கைது செய்ய போலீசார் சென்ற போது, புரட்சி பாரதம் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
பூந்தமல்லியில் இருந்து திருவள்ளுர் செல்லும் வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சாலை மறியலில் ஈடுபடும் புரட்சி பாரதம் கட்சியினரை கலையச் செய்ய கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.
அதைத் தொடர்ந்து பூவை ஜெகன் மூர்த்தியை திருவாலங்காடு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனால், ஆத்திரம் அடைந்த புரட்சி பாரதம் கட்சித் தொண்டர்கள் பூவிருந்தவல்லி – திருவள்ளூர் நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஜெகன் மூர்த்தியை கைது செய்ய வந்த போலீசாருக்கு எதிராக சாலை மறியலில் ஈடுபட்டோரைப் பிடித்து போலீசார் வேனில் ஏற்றி வருகின்றனர். இதனால், போலீசார் – போராட்டக்காரர்கள் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.