• Fri. Apr 19th, 2024

கோவில்களை அனைத்து நாட்களிலும் திறக்க கோரி, பாஜக நிர்வாகிகள் ஆர்ப்பாட்டம்!..

Byகுமார்

Oct 7, 2021

தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களையும் வாரத்தின் அனைத்து நாட்களிலும் திறக்க கோரி, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட பாஜக நிர்வாகிகள் இன்று மீனாட்சி அம்மன் கோவில் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சி.சீனிவாசன், மதுரை புறநகர் மாவட்ட தலைவர் மகா.சுசீந்திரன் தலைமை வகித்தனர். விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் கஜேந்திரன், மேற்கு மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ஓபிசி மாநிலத் தலைவர் லோகநாதன், முன்னாள் மத்திய அமைசர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் சிறப்புரையாற்றிய பொன்ராதாகிருஷ்ணன் பேசியதாவது, ஜனவரி 1-ஆம் தேதி கிறிஸ்தவர்கள் புதுவருடத்தை கொண்டாடுகிறார்கள் அது அவர்களது உரிமை, விழாக்களைக் கொண்டாடட்டும். அதுபோல எங்களது விழாக்களை நாங்கள் கொண்டாடுகிறோம். அப்படி விழாக்களைக் கொண்டாடும் எங்களை தடுப்பது என்று சொன்னால் உங்களுக்கு சனி பிடித்து இருக்கிறார் என்று நாங்கள் கருதுகின்றோம். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்ககூடிய 90 சதவீதத்தினர் இந்துக்கள். அதிலும் குறிப்பாக அமைச்சர்கள் பலர் இந்த கோவிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்கின்றார்கள். அது எங்களுக்கு மிகவும் சந்தோஷம்.

நான் கடந்த சில நாட்களுக்கு முன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றிருந்தேன். அங்கு உள்ளவர்கள் தெரிவித்தனர், இங்கு வரக் கூடியவர்கள் அதிகம் திமுகவை சேர்ந்தவர்கள்தான். செய்த பாவங்களை போக்க கோவில் முன்பு சாஷ்டாங்கமாக விழுகின்றனர் என்றார்.

கோடி இந்துக்கள் வழிபட்டு வரும் கோவில்களை வருகின்ற வெள்ளிக்கிழமை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கின்றேன். முதல்வருக்கு கோரிக்கை விடுக்கின்றேன். வெள்ளிக்கிழமை கோவிலை திறக்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

அப்படி நீங்கள் திறக்கவில்லை என்றால் காசி, திருச்செந்தூர் உள்ளிட்ட எந்த கோவிலுக்கு சென்றாலும் உங்களது பாவம் தீராது என்றார். உங்களுக்கு சனி பிடித்தே தீரும் என்பதில் சந்தேகமில்லை. இது தமிழகத்திற்கு நல்லதல்ல, தமிழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன். அனைத்து மக்களின் கோரிக்கைக்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அப்படி நாங்கள் போராடும் பொழுது, இது மதசார்பற்ற இந்தியாவுக்கு எதிரானது என்றால் அந்த மதசார்பற்ற முறையை தீயிட்டுக் கொளுத்துவோம். ஆலயங்களுக்ககுள் நுழைவதில் உரிமை மறுக்கப்படும் என்றால் ஆலயங்களுக்கு நுழைந்தே தீருவோம் என முடிவெடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *