• Fri. Apr 18th, 2025

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது: பகவந்த் மான்!

ByP.Kavitha Kumar

Mar 22, 2025

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த கூட்டத்தில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேசுகையில், “மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யக்கூடாது. இதனால் தமிழகம், பஞ்சாப் மட்டுமல்ல மக்கள் தொகையை கட்டுப்படுத்திய அனைத்து மாநிலங்களையும் பாதிக்கும். இந்த நடவடிக்கை மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு மத்திய அரசு வழங்கும் தண்டனையா?

எங்கெல்லாம் வெற்றி வாய்ப்பு உள்ளதோ அங்கெல்லாம் அதனைத் தக்க வைக்க பாஜக முயற்சி செய்கிறது. தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு 100 சதவீதம் ஒத்துழைப்பு வழங்குவோம். இந்த கூட்டத்தை கூட்டியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டானுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று பேசினார்.