


தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது என்று ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் மற்றும் 7 மாநிலங்களைச் சேர்ந்த 29 அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், ” மக்களை தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பால் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறைய வாய்ப்பு உள்ளது. தற்போது இருக்கும் விகிதம் தொகுதி மறுசீரமைப்பிலும் தொடர வேண்டும். தொகுதி மறுசீரமைப்பில் தென் மாநிலங்களின் தொகுதி குறையக்கூடாது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் எந்தவொரு மாநிலத்தின் பிரதிநிதித்துவமும் குறைக்கப்படாத வகையில் தொகுதி மறுசீரமைப்பு நடத்த வேண்டும்” என்று அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

