• Thu. Dec 12th, 2024

காவிரி ஆற்றில் குளிக்க, சாமி தரிசனம் செய்ய தடை

ByA.Tamilselvan

Aug 2, 2022

காவிரி ஆற்றில் தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்து வருவதால் ஆடி 18 பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு செல்வதற்கு தடை விதித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதையடுத்து, மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நாளை ஆடிப்பெருக்கு விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவின்போது ஏராளமானோர் காவிரியில் நீராடி சாமி தரிசனம் செய்வது வழக்கம். சுமங்கலி பெண்கள் ஆடிப்பெருக்கின்போது புதிய தாலி அணியும் வழக்கம் உள்ளது. இதனிடையே காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பாதுகாப்பு கருதி பரமத்திவேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட காவிரி கரையோர பகுதி பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று குளிப்பதற்கும், முளைப்பாரி விடுவதற்கும், வழிபாடு செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசார் காவிரி ஆற்றின் நுழைவு வாயிலில் இரும்பு தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.