• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

இளைஞர்களை தொழில்முனைவோராக உருவாக்கும் ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு..,

BySeenu

Aug 10, 2026

இளைஞர்கள் வேலைவாய்ப்புகளைத் தேடுவதைவிட, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் தமிழக ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 கோவையில் நடைபெற்றது.

இதுகுறித்து ஆர்ய வைசிய அறிவுசார் மாநாடு 2026 திட்டத் தலைவர் சுரபி கார்த்திக் கூறும்போது :- தமிழ்நாடு ஆர்ய வைசிய மகாசபை சார்பில் நீலம்பூர் பிஎஸ்ஜி மாநாட்டு மையத்தில் நடைபெறும் இந்த மாநாட்டில் சுமார் 10,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். ஒரு நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் 12 மணி நேரம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 30-க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள் பங்கேற்றனர். நான்கு அறிவுசார் அரங்குகள் உள்ளிட்ட பல்வேறு அரங்குகள் மற்றும் வர்த்தக வாய்ப்புகளுக்கான கண்காட்சியும் இடம்பெற்றது.

தொழில்முனைவு, தொழில்நுட்பம், உற்பத்தித் துறை, நிதி, தலைமைத்துவம், புத்தாக்கம், அறிவியல், தேசியப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகள் குறித்து கருத்தரங்குகள், கலந்துரையாடல்கள் மற்றும் பயிலரங்குகள் நடைபெற்றன.

இந்த மாநாட்டுக்கான கருத்து 120 நாள் விழிப்புணர்வுப் பயணத்தின் மூலம் உருவானதாகும். இந்தப் பயணத்தின்போது 40-க்கும் மேற்பட்ட நகரங்கள், பேரூராட்சிகள் மற்றும் கிராமங்களுக்குச் சென்று 4,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களை நேரடியாகச் சந்தித்தோம்.

இளைஞர்களிடம் திறமை, கல்வி மற்றும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருந்தபோதிலும், வழக்கமான வேலைவாய்ப்புகளுக்கு அப்பால் உள்ள வாய்ப்புகள் குறித்து பலர் அறிந்திருக்கவில்லை. வேலைவாய்ப்புகளைத் தேடுவதிலிருந்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மனநிலைக்கு இளைஞர்களை அழைத்துச் செல்வதே இந்த மாநாட்டின் நோக்கம் என்றார். பாருங்கள் – நம்புங்கள் – உருவாக்குங்கள் என்ற மூன்று அடிப்படை நோக்கங்களின் அடிப்படையில் மாநாடு நடைபெற்றது.

மாநாட்டையொட்டி பெரிய அளவிலான வர்த்தகக் கண்காட்சியும் நடைபெற்றது. இதில் தொழில் வாய்ப்புகள், தொழில் தீர்வுகள், சமூக முன்னெடுப்புகள், எதிர்காலத் தொழில்கள் மற்றும் அரசு சார்ந்த சேவைகள் மற்றும் ஆலோசனைகள் இடம்பெற்றன. இளம் தொழில்முனைவோர் மற்றும் தொழில் தொடங்க விரும்புவோருக்காக வைசியா ஷார்க் டேங்க் நிகழ்ச்சியும் முக்கிய அம்சமாக இடம்பெறுகிறது.

நம்பிக்கைக்குரிய தொழில் யோசனைகள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் ரூ.50 கோடிக்கும் அதிகமான நிதித் தொகுப்பை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தொழில் யோசனைகள், வழிகாட்டுதல், தொழில் தொடர்புகள் மற்றும் மூலதனம் ஆகியவற்றை ஒரே தளத்தில் இணைப்பதே இதன் நோக்கமாகும்.
உலகம் முழுவதும் உள்ள ஆர்ய வைசிய சமூகத்தினரை ஒருங்கிணைக்கும் வகையில் விட்டோ (ஏஐவுழு) ஃ வைசியா சூப்பர் ஆப் மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

தொழில்முனைவோர், வல்லுநர்கள், மாணவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் குடும்பங்களை இணைத்து, அவர்கள் ஒருவருக்கொருவர் தொடர்புகொண்டு, இணைந்து செயல்பட்டு, முதலீடு செய்து, தொழிலை வளர்த்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் இந்த டிஜிட்டல் தளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விழாவில் டாக்டர் ஏ. கலியமூர்த்தி, ஐபிஎஸ், ஜி.ஆர். ராதாகிருஷ்ணன், ஜிஆர்டி குழும நிர்வாக இயக்குநர், ஜி.ஆர். அனந்தபத்மநாபன், ஜிஆர்டி குழும நிர்வாக இயக்குநர், ஓய்வுபெற்ற மேஜர் மதன் குமார், மதுரை வீரன் மாரிமுத்து, குரு மித்ரேஷிவா, கே. அண்ணாமலை உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர்.

கல்வி, தொழில்முனைவு, தொழில்நுட்பம், வேளாண்மை, சமூகப் பங்களிப்பு, விளையாட்டு, கலை, ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கௌரவிக்கும் ஆர்ய வைசிய சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

பெண்கள், இளைஞர்கள், தொழில் மற்றும் சமூக சேவை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட உள்ளன.

பதிவு செய்த உறுப்பினர்களுக்கு மாநாட்டில் பங்கேற்பு, தங்குமிடம் மற்றும் உணவு இலவசமாக வழங்கப்படுவதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொருளாதாரப் பின்னணி காரணமாக அறிவு, தொடர்புகள் மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பெறுவதில் எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே இதன் நோக்கமாகும்.

சிறு நகரம் அல்லது கிராமத்தைச் சேர்ந்த இளைஞரும் பெருநகரத்தைச் சேர்ந்த இளைஞருக்கு இணையான அறிவு, தொடர்புகள் மற்றும் வாய்ப்புகளைப் பெறும் சூழலை உருவாக்குவதே மாநாட்டின் நீண்டகால நோக்கமாகும். இவ்வாறு அவர் கூறினார்.