• Sat. Sep 26th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

பொதுக்குழுக் கூட்டத்தில் புதிய மாவட்ட நிர்வாகிகள் தேர்வு..,

ByPrabhu Sekar

Sep 26, 2026

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சி (மமக) சார்பில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் தாம்பரத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவர் S.K.ஜாஹிர் உசேன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் மற்றும் பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டு மாவட்டத்தின் அமைப்பு சார்ந்த பணிகள் மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து கலந்துரையாடினர்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், தாம்பரம் மாநகராட்சி மாமன்ற உறுப்பினருமான தாம்பரம் எம். யாக்கூப், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் குணங்குடி அத்தா R.M. ஹனிபா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் நிகழ்வில், மாவட்ட தேர்தல் அதிகாரியும் தலைமைப் பிரதிநிதியுமான A.K. சுல்தான் அமீர் கலந்து கொண்டு தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்து, புதிய மாவட்ட நிர்வாகிகளைத் தேர்வு செய்தார்.

அதன்படி, புதிய மாவட்ட நிர்வாகிகளாக செங்கல்பட்டு வடக்கு மாவட்ட தலைவராக S.K. ஜாஹிர் உசேன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக OKN. அப்துல் காதர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மாவட்ட செயலாளராக A. சௌகத் அலி, மாவட்ட பொருளாளராக எம்.சபியுல்லா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும் மாவட்ட துணைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகளும் தேர்வு செய்யப்பட்டு, அவர்களிடம் மாவட்ட அமைப்பு சார்ந்த பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன.

புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மாவட்ட அளவில் தமுமுக மற்றும் மமக அமைப்புப் பணிகளை மேலும் வலுப்படுத்துவது, பொதுமக்கள் மற்றும் சமூக மக்களுக்கான சேவைகளை தொடர்ந்து முன்னெடுப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி செயலாளர் S. தமிம் அன்சாரி, மாநில செயற்குழு உறுப்பினர் S. ஜிந்தா மதார் SMI, தலைமைப் பிரதிநிதி Y. ஜெய்னுல் ஆபிதீன் உள்ளிட்ட மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

புதியதாக தேர்வு செய்யப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுக்கு நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். கூட்டம் கட்சி நிர்வாகப் பணிகளை ஒருங்கிணைத்து, செங்கல்பட்டு வடக்கு மாவட்டத்தில் தமுமுக மற்றும் மமக அமைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் வகையில் நடைபெற்றது.