


கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஊர் மக்கள் திரண்டு வந்தனர்.
காரைக்கால் மாவட்டம் நிரவி காளியம்மன் கோவில் தெருவில் 160 குடும்பங்கள் வசித்து வருகின்றன. அப்பகுதியில் பழமை வாய்ந்த மகிஷாசுரமர்த்தினி காளியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலய நிர்வாகத்திற்காக அப்பகுதியை சேர்ந்த 5 பேரை ஊர் மக்கள் தரப்பில் நியமித்து அவர்கள் கோவிலை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கோயிலில் நிதி கையாடல் நடைபெற்றிருப்பதாக சிலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோவில் நிர்வாகிகள் வட்டாட்சியர் தலைமையிலான விசாரணைக்கு வந்து கணக்கு வழக்குகளை காண்பித்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கோவில் நிர்வாகிகள் மீது அவதூறு பரப்பியதாக அதே பகுதியை சேர்ந்த அசோக்பாபு, கிருஷ்ணகுமார், ராதாகிருஷ்ணன், ராமச்சந்திரன், பாஸ்கரன் உள்ளிட்டவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி மக்கள் பெண்கள் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை சந்தித்து மனு அளித்துள்ளனர்.

கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோவிலை சரியாக நிர்வகித்து வரும் கோயில் நிர்வாகத்தினர் மீது ஆதாரம் இல்லாது அவதூறு பரப்பி வரும் ஐந்து பேர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

