• Fri. Mar 29th, 2024

மேலும் 5 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம்..!

ByA.Tamilselvan

Nov 2, 2022

தமிழகத்தில் மேலும் 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்தை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், அங்காளம்மன் கோயில், இருக்கன்குடி மாரியம்மன் கோயில், பொள்ளாச்சி ஆனைமலை மாசாணியம்மன் கோயில், நாமக்கல் நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட 5 கோயில்களில் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டத்துக்கான தொடக்க நிகழ்ச்சி மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் நேற்று நடைபெற்றது. அப்போது, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பக்தர்களுக்கு பிரசாதங்களை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.
ஏற்கெனவே திருச்செந்தூர், வடபழனி, திருவேற்காடு, சமயபுரம் உள்ளிட்ட 10 கோயில்களில் நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டம் மேலும் 5 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் சேகர்பாபு, செய்தியாளர்களிடம் கூறுகையில், “இந்த திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ.41 லட்சம் செலவாகிறது. கூட்டம் அதிகமாக வருகின்ற 3 மலைக் கோயில்களில் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஆண்டு 10 கோயில்களில் அன்னதான திட்டத்தையும், ராமேஸ்வரம் கோயில், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ஆகிய 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் திட்டத்தையும் முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். மழை, வெள்ளம் காலங்களில் மக்கள் பாதிப்பை தீர்ப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் உணவு தயாரிக்கின்ற பணியில் ஈடுபடுவோம். அன்னதானம் வழங்கும் கோயில்களிலெல்லாம் உணவுக்கூடங்கள் இருக்கின்றன. தேவைப்பட்டால், அதன் வாயிலாக உணவளிக்கின்ற பணியை மேற்கொள்வோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *