• Fri. Jun 21st, 2024

பருவமழை தீவிரம்: முதல்வர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழையையொட்டி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 29-ந் தேதி தொடங்கியது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மிக கனமழை முதல் கனமழை வரை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழையால் ஏரி, குளங்கள் நிரம்பி வருகின்றன. அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. கலெக்டர்களுடன் ஆலோசனை வடகிழக்கு பருவமழையால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு மேற்கொள்ளப்பட்டுள்ள தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது இல்லத்தில் இருந்தபடியே பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் மற்றும் மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் பாதிப்பிற்குள்ளாகும் பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க பல்துறை மண்டலக் குழுக்கள் அமைக்க வேண்டும், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் செல்போன் சேவை வழங்கும் நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும், பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளுக்கு தாமதமின்றி மீட்பு படையினை அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண மையங்களில் பாதுகாப்பாக தங்க வைத்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் வழங்கவும், பாதிப்புக்குள்ளாகும் பகுதியில் உள்ள மக்களை வெளியேற்றும் போது முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி, குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவும், பழுதடைந்த, பலவீனமான சுற்றுச்சுவர்களை அப்புறப்படுத்தவும் கேட்டுக்கொண்டார். பால்-உணவு முகாம்களில் தங்க வைக்கப்படும் குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவைப்படும் பால், ரொட்டி, உணவு, மருந்துகள் தடையின்றிக் கிடைப்பதை உறுதி செய்திடவும், மழைக்காலங்களில் தொற்று வியாதிகள், டெங்கு போன்றவை பரவாமல் தடுத்திட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மூலம் தகுந்த நடவடிக்கை எடுக்கவும், மருத்துவ முகாம்கள் நடத்திடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைத்திட தேவையான நடவடிக்கைகள் எடுத்திடவும், மின்னல் தாக்குதலால் உயிரிழப்பு ஏற்படுவதை குறைத்திட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், வெள்ளப்பாதிப்புக்கு உள்ளாகும் பகுதிகளில் தேவையான நீர் இறைப்பான் எந்திரங்களையும், மரம் அறுக்கும் கருவிகளையும், மணல் மூட்டைகளையும் தயார் நிலையில் வைத்திடவும் கேட்டுக்கொண்டார்.
மேலும் நிலச்சரிவு, மண்சரிவு, பாறை சரிவுகள் ஏற்படும் பகுதிகளை கண்டறிந்து கவனம் செலுத்தி, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். ஒத்துழைக்க வேண்டும் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் சென்னை சேப்பாக்கத்தில் மாநில அவசரக்கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. உதவிகள் தேவைப்படும் பொதுமக்கள் 1070 கட்டணமில்லா தொலைபேசி சேவையை பயன்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினார். பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு தொற்றுநோய்களில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள காய்ச்சிய குடிநீரையே குடித்திட வேண்டும் என்றும், மின்சார சாதனங்களை கவனமாக கையாள வேண்டும் என்றும், அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும், மீனவர்கள் வானிலை ஆய்வு மையத்தின் அறிவுறுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை தாமதமின்றி வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அனைத்து அரசு துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என்றார். இதுபோன்ற பெருமழை மற்றும் இயற்கை இடர்பாடுகள் ஏற்படும் காலங்களில் இரவுபகல் பாராது பணியாற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்களுக்கும் பாராட்டு தெரிவித்தார். இதே அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றவும் கேட்டுக்கொண்டார். கூட்டத்தில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், பி.கே. சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மற்றும் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *