நடுத்தர மக்களின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றுவதற்காக மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அம்மா சிமெண்ட் என்ற பெயரில் குறைந்த விலையில் 190 ரூபாய்க்கு விற்பனை செய்யும் திட்டத்தை 2014ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டம் 5 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில் 2020ம் ஆண்டு இதன் விலை ரூ.190யில் இருந்து 2018 ஆக உயர்த்தப்பட்டது.
தற்போது தமிழகத்தில் சிமெண்ட் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், தமிழக அரசு விலை உயர்வைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. iன்று தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் தொழில்துறை சார்ந்த பல்வேறு திட்டங்களை குறித்து உரையாற்றினார். அப்போது “வலிமை” என்கிற பெயரில் சிமெண்ட் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவித்த தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அரசு சிமெண்ட் வணிகப்பெயருடன் வலிமை என்ற புதிய வணிகப் பெயர் கொண்ட சிமெண்ட் இந்த ஆண்டு வெளிச்சந்தையில் தமிழ்நாடு அரசு சார்பாக அறிமுகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.
இதனிடையே தமிழக அரசு அம்மா பெயரில் உள்ள திட்டங்களின் பெயரை மாற்றி வருவதாக அதிமுகவினர் கொந்தளிப்பில் உள்ளனர். கலைஞர் குடிநீர், அம்மா கிளினிக் செயல்படாமல் முடக்கபடுவது, அம்மா உணவகங்கள் இருட்டடிப்பு என திமுக அரசு தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், வலிமை என்ற பெயரில் புதிய சிமெண்ட் அறிமுகப்படுத்தப்படுவது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.