• Mon. Apr 21st, 2025

கோவையில் குவிக்கப்படும் 7 ஆயிரம் போலீசார்- அமித்ஷா இன்று வருகை

ByP.Kavitha Kumar

Feb 25, 2025

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கோவைக்கு இன்று வருகை தருகிறார். அவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் 7 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாநகர் மாவட்ட பாஜக அலுவலகம் பீளமேடு பகுதியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (பிப்ரவரி 26) காலை திறந்து வருகிறார். அத்துடன், ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள புதிய கட்சி அலுவலக கட்டிடங்களை கோவையில் இருந்தே காணொலி மூலம் அமித்ஷா திறந்து வைக்கிறார். அன்று மாலை கோவை ஈஷா யோகா மைய வளாகத்தில், மகா சிவராத்திரி விழாவில் சிறப்பு விருந்தினராக அமித்ஷா கலந்து கொள்கிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 9 மணியளவில் அமித்ஷா கோவை வருகிறார். அங்கிருந்து அவர் கார் மூலம் அவினாசி சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார். நாளை மறுநாள் தனிவிமானம் மூலம் டெல்லி செல்கிறார். அமித்ஷா கோவை வருகையை கண்டித்து பல்வேறு அமைப்புகள் சார்பில் கருப்புக்கொடி போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோவையில் போலீசார் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தங்குமிடம், பீளமேடு கட்சி அலுவலகம் உள்ள பகுதி, ஈஷா வளாகம், அவர் செல்லும் பாதைகள் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

மேலும், கோவையில் தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மேற்பார்வையில், மேற்கு மண்டல ஐஜி செந்தில்குமார், கோவை மாநகர காவல் ஆணையர் ஏ.சரவண சுந்தர் ஆகியோர் தலைமையில் 7 ஆயிரம் பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மத்திய அமைச்சர் அமித்ஷா தங்குமிடம், பீளமேடு கட்சி அலுவலகம் உள்ள பகுதி, ஈஷா வளாகம், அமித்ஷா செல்லும் பாதைகள் ஆகிய இடங்கள் போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.