


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும் என்று பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லையில் பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, திருப்பரங்குன்றம் பகுதியில் எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய உறவினர்கள் வீட்டில் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது. ரெய்டை கொடுத்து அதிமுகவை பாஜக கூட்டணிக்கு வரவழைக்க முயற்சி நடக்கிறதா?” என கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நயினார் நாகேந்திரன், “கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் நேரடியாக பேசினாலே கூட்டணி அமைந்துவிடும்; ரெய்டு நடத்தி கூட்டணி அமைக்க வேண்டிய அவசியமில்லை. அதிமுகவினர் தொடர்புடைய வீட்டில் மட்டும் ரெய்டு நடக்கவில்லை. திமுகவினர் வீட்டிலும் நடக்கிறது. யார் யார் வீட்டில் பணம் இருக்கிறது என வருமானவரித்துறை நினைக்கிறதோ அங்கு ரெய்டு நடக்கும்” என்று பதிலளித்தார்.
பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில், நயினார் நாகேந்திரனின் பேட்டி தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

