டிசம்பர் 13, புதிய ‘மிஸ் யுனிவர்ஸ்’ என்ற பட்டத்தை வென்றார் இந்தியாவின் ஹர்னாஸ் சந்து. 21 ஆண்டுகளுக்கு பின்பு இந்தியாவிற்கு இந்த பட்டம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. லாரா தத்தா மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருக்குப் பிறகு இந்தியாவிலிருந்து மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற மூன்றாவது பெண் சந்து.
இந்த போட்டியில் இவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுள் ஒன்று, பலர் காலநிலை மாற்றம் ஒரு புரளி என்று நினைக்கிறார்கள், அவர்களை நம்ப வைக்க நீங்கள் என்ன செய்வீர்கள்?” என்பது.

அதற்கு பதிலளித்த சந்து, “இயற்கை எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பார்க்கும்போது என் இதயம் உடைகிறது, இதற்கு எல்லாம் நமது பொறுப்பற்ற நடத்தைதான் காரணம். இது பேச்சை குறைத்து நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் என்று நான் முழுமையாக உணர்கிறேன். ஏனெனில் நமது ஒவ்வொரு செயலும் இயற்கையைக் காப்பாற்றலாம் அல்லது கொல்லலாம். வருந்துவதையும் பழுதுபார்ப்பதையும் விட தடுப்பதும் பாதுகாப்பதும் சிறந்தது, இதைத்தான் நான் இன்று உங்களை நம்ப வைக்க முயற்சிக்கிறேன்,” என்று அவர் கூறினார். இந்த பதில் தான் அவரை டாப் 3 சுற்றுக்கு எடுத்து சென்றது.
முன்பெல்லாம் இந்த அழகிகள் அன்னை தெரசாவைப் போல சேவை செய்ய வேண்டும், வறுமையில் வருவோர்க்கு உதவ வேண்டும் என்றுதான் கூறுவார்கள். ஆனால், ‘காலநிலை மாற்றம்’ பற்றி பேசுவதுதான் புது ட்ரெண்டாக மாறிவிட்டது.
1990களுக்கு பிறகே, இந்தியாவில் ஆறு உலக மற்றும் பிரபஞ்ச அழகிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விளைவாக, பெரு நகரங்களில் மட்டுமே இருந்த அழகு நிலையங்கள் கிராமப்புறங்களில் கூட முளைக்க ஆரம்பித்தது. அழகுசாதனப் பொருட்களின் சந்தை மதிப்பும் பல கோடி ரூபாயைத் தாண்டியது.

ஆனால் ஒரு சந்தேகம் 2000ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவில் அழகிகளே பிறக்கவில்லையா? இல்லை பொருட்களின் சந்தை மதிப்பு கூடிவிட்டது கொஞ்ச நாள் கழித்து வருவோம் என லீவ் எடுத்துக்கொண்டு இப்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஓர் உலக அழகி கண்டுபிடிக்கப்பட்டுள்ளாரா?
சரி, கடந்த 21ஆண்டுகளாக இந்தியாவில் அழகிகள் இல்லை என்றே வைத்துக்கொள்வோம். தற்போது காலநிலை மாற்றம் பேசிய உலக அழகிக்கு, ஆண்டுக்கு 2-4 விழுக்காட்டு கரிம வெளியீட்டில் நடைபெறுகிறது, இது இவர் சார்ந்திருக்கும் அழகுசாதன பொருட்களின் சந்தை தான் காரணம் என்பதை அறிந்திருக்க மாட்டாரா என்ன?
இனி அடுத்த ஓராண்டுக்கு இவர் அழகு பொருட்களின் சந்தை வளர்ச்சிக்காக நிறுவனங்களால் உலகின் பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்படுவார். இதனால் ஏற்படும் விளைவுகளும் அவருக்கு நன்கு தெரியும். இருப்பினும் இவர்கள் காலநிலை மாற்றத்தைப் பற்றியும், உலகம் வெப்பமடைதல் பற்றியும் பேசுவது சிரிப்புதான்.
தற்போது இவரைக் குறித்து கூகுளில் ‘Harnaaz Sandhu’ என டைப் செய்தால் அவரது மதம், குடும்பம், உடல் எடை, உயரம், பிறந்த தேதி, வயது, பிகினி, போட்டோ, குடும்பம், பயோகிராபி, இன்ஸ்டாகிராம் பக்கம் மாதிரியானவை குறித்துதான் நெட்டிசன்கள் அதிகம் தேடி தெரிந்துக் கொண்டுள்ளார்கள் என தெரிகிறது.
அதோடு மிஸ் யூனிவர்ஸ் பட்டம் வெல்வதற்கு முன்னர் அவரை இன்ஸ்டாகிராமில் 2.9 லட்சம் ஃபாலோயர்கள் மட்டுமே இருந்த நிலையில், தற்போது 1.7 மில்லியனாக உயர்ந்துள்ளது.
இவை அனைத்தும் வியாபார உக்கியே. இன்னும் 2 வாரங்கள் தான், அனைத்து தொலைக்காட்சி விளம்பரங்களிலும் ஹர்னாஸ் சந்தின் முகம்தான் பிரதானம். சாதரான ஒரு யூடியூப் சேனலில் பார்வையாளர்கள் அதிகமானால் நான் தலை முடிக்கு இந்த ஷாம்பூ போடுகிறேன்.. முகத்திற்க்கு இந்த கிரீம்யை பயன்படுத்துகிறேன் என பேச வைக்கும் இந்த வர்த்தக உலகம்,
மிஸ் யுனிவர்ஸ் அவர்களை சும்மா விடுமா..
இந்த உலகில் தற்போது எல்லாமே சந்தைப்படுத்துதல் தான்… அனைத்துமே வியாபாரம் தான்… இதற்க்கு ஹர்னாஸ் சந்து மட்டும் விதிவிலக்கா என்ன?