• Thu. Mar 28th, 2024

நடிகர் திலகம் சிவாஜிகணேசன் 94வது பிறந்தநாள்.. அவரது உருவச்சிலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை..!

Byவிஷா

Oct 1, 2021

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 94-வது பிறந்த நாளையொட்டி சென்னை, அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.


நடிகர் திலகம் செவாலியர் சிவாஜி கணேசன் 1927 ஆம் ஆண்டு அக்டோபர் திங்கள் 1 ஆம் நாள் பிறந்தார். குழந்தைப் பருவம் முதல் நடிப்பதில் பேரார்வம் கொண்டு, பல்வேறு நாடக குழுக்களில் பங்கேற்று நடித்து வந்தார். பேரறிஞர் அண்ணாவால் எழுதப்பட்ட “சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம்” என்னும் நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த அவரின் நடிப்புத் திறமையினைக் கண்ட பெரியார் வியந்து பாராட்டியதோடு மட்டுமல்லாமல், விழுப்புரம் சின்னையப் பிள்ளை கணேசன் என்ற அவரது இயற்பெயரை “சிவாஜி கணேசன்” என்று பெயர் சூட்டினார்.

உலகப் புகழ்பெற்ற நடிகர் திலகத்திற்கு இந்த பெயரே இறுதிவரை நிலைத்து நின்றது. நடிகர் திலகத்தின் திறமைக்குச் சான்றாக பத்ம ஸ்ரீ விருது, பத்ம பூஷன் விருது, செவாலியே விருது மற்றும் நம் தாய்நாட்டின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது உள்ளிட்ட விருதுகளோடு அயல்நாட்டின் உயரிய விருதுகளையும் பெற்ற பெருமைக்குரியவர். நடிப்பின் இமயமாகத் திகழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 2001 ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இயற்கை எய்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *