
தமிழ்த் திரைப்பட, நாடக நடிகரானவர் எஸ். ஏ. நடராஜன். நாடகத்துறையில் குறிப்பிடத்தக்க பங்களிப்பினை தந்த பின்னர் திரைத்துறையிலும் நடித்தார். நடராஜன் வாளவாடி என்ற ஊரில் இருந்த அவரது பெரிய தாயாரான அம்முலம்மா என்பவரின் வளர்ப்புப் பிள்ளையாக 13 வயது வரை வளர்ந்தார். உடுமலைப்பேட்டையிலும், மேட்டுப்பாளையத்திலும் ஆறாம் வகுப்பு வரை கல்வி கற்றார். நடராஜன் சில காலம் தனது தமையனார் வீட்டில் வசித்து வந்த போது 1933 இல் நவாப் ராஜமாணிக்கம் கம்பனி கோவை எடிசன் அரங்கில் நாடகங்களை நடத்தி வந்தது. அவர்களின் நாடகங்களைப் பார்த்து வந்த நடராஜனுக்கு நாடகங்களில் நடிக்கும் ஆசை ஏற்பட்டது. தாயாரின் அனுமதி இன்றி நாடகக் கம்பனியில் சேர்ந்தார். 1933ல் அவர்களது நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பெரும்பாலான நாடகங்களில் இவர் பெண் வேடங்களிலேயே நடித்தார். 1939 இல் கும்பகோணம் முகாமில் இன்பசாகரன் நாடகத்தில் எம். என். நம்பியாருக்குப் பதிலாக உத்தமபாதன் வேடத்தில் நடித்தார். சேலம் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த போது, சேலம் மீனாட்சி பிலிம் கம்பனியின் கோவிந்தசாமி பிள்ளையின் அறிமுகம் கிடைத்தது. அதன் மூலம் டி. ஆர். சுந்தரம் இயக்கிய சதி சுகன்யா (1942) படத்தில் சிறிய வேடங்களில் நடித்தார். அதன் பிறகு வாய்ப்புக் கிடைக்காமல் தாராபுரம் திரும்பினார். பின்னர் ஜுபிடர் தயாரிப்பில் கே. ராம்நாத் இயக்கிய கன்னியின் காதலி படத்தில் வசந்தபுரி மன்னனாக நடித்தார். முப்பதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்த நடராஜன், நல்ல தங்கை (1955) என்ற படத்தைத் தனது ஃபார்வட் ஆர்ட் பிலிம்ஸ் கம்பெணி மூலம் தயாரித்து இயக்கினார். இவர் நடித்த சில படங்கள் கன்னியின் காதலி, மந்திர குமாரி, அழகி, நல்ல தங்கை போன்ற படங்கள் இன்றும் இவர் பெயர் சொல்லும்.தன் நடிப்பால் கவர்ந்த எஸ். ஏ. நடராஜன் பிறந்த தினம் இன்று..!
