சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா நிறைவு விழாவில் காமயசுவாமி கோவில் கமிட்டியார் பூப்பல்லாக்கில் ஸ்ரீராமஅழகர் கள்ளழகர் அவதாரத்துடன் பிரியாவிடைபெற்று பிருந்தாவன தோப்பிற்கு சென்றார். கள்ளழகர் மீது பக்தர்கள் வாழைப்பழம், காசு, பூக்கள் எறிந்து பக்தர்கள் வழிபாடு செய்து நேர்த்தி கடன் செலுத்தினார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் சித்திரை திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். 99 வருடங்களாக சின்னாளபட்டியில் சித்திரை திருவிழாவினை ஸ்ரீராம அழகர் தேவஸ்தான கமிட்டியர்கள் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். கடந்த சித்ரா பௌர்ணமி அன்று காந்திகிராமம் வெள்ளியங்கிரி நதியில் ஸ்ரீராமஅழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து சின்னாளபட்டியில் நகர்வலம் வந்த ஸ்ரீராமஅழகர் பொன்விழா மண்டபத்தில் உள்ள தசாவதார கொட்டகையில் தங்கி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சுித்திரைத் திருவிழா நிறைவுநாளை முன்னிட்டு ஸ்ரீராமஅழகர் 10 அவதாரம் எடுத்த பின்பு ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான கமிட்டியார்கள் ஸ்ரீீகாமயசுவாமி கோவில் கமிட்டியார்களிடம் ஸ்ரீீராமஅழகரை ஒப்படைத்தனர். அங்கு ஸ்ரீராமஅழகருக்கு கருப்பு பட்டு உடுத்தி, கள்ளழகர் சிறப்பு அலங்காரம் செய்து காமயசுவாமி கோவில் கமிட்டியாரால் அலங்கரிக்கப்பட்ட பூ பல்லாக்கில் வைத்து வழிபாடு செய்தனர்.

காலை 06.30 மணியளவில் மேளதாளத்துடன் அழைத்து வரப்பட்ட ஸ்ரீராமஅழகர் தேவஸ்தான கமிட்டியார்களுக்கு காமயசுவாமி கோவில் கமிட்டியார்கள் பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன் பின்னர் காலை 07.00 மணியளவில் ஸ்ரீகாமயசுவாமி கோவில் கமிட்டி தலைவர் ஜமீன்தார் டி.சி.முத்துக்குமார் கொடியசைக்க காமயசுவாமி கோவில் கமிட்டியர்கள் மற்றும் இளைஞரணியினர் பூப்பல்லாக்கை கோவிந்தா! கோவிந்தா!! என்ற கோஷத்துடன் தூக்கிக்கொண்டு ஊர்வலமாக புறப்பட்டனர். பூப்பல்லாக்கு சுவாமியை ஊஞ்சல் போல் ஆட்டிச் சென்றது கண்கொள்ளா காட்சியாக இருந்தது. கோட்டை மந்தை அரசமரம் அருகே கள்ளழகர் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த தேவர் சமுதாய மக்களிடம் பூப்பல்லாக்கை காமயசுவாமி கோவில் கமிட்டியார்கள் ஒப்படைத்தனர்.
பின்னர் பூப்பல்லாக்கை தேவர் சமுதாயத்தினர் சின்னாளபட்டி பிரிவு அருகே உள்ள பிருந்தாவனத் தோப்பிற்கு கள்ளழகரை அழைத்துச் சென்றனர். வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான பெண்கள் காத்திருந்து கள்ளழகரை தரிசனம் செய்தவண்ணம் இருந்தனர். பக்தர்கள் தங்கள் வேண்டுதலை கள்ளழகர் நிறைவேற்றியதற்காக கள்ளழகர் பவனி வந்த பூ பல்லக்கின் மீது வாழைப்பழம், பூ, காசு, மாதுளைம்பழம், திராட்சைப் பழம் ஆகியவற்றை சுவாமியின் மீது எறிந்து தங்கள் காணிக்கையினை செலுத்தினர்.

பூப்பல்லாக்கு விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீகாமயசுவாமி கோவில் கமிட்டி தலைவர் சிவமுருகேசன், செயலாளர் ஏ.கிருஷ்ணவேல்ராஜா பொருளாளர் என்.சுப்பையா, துணைத் தலைவர்கள் ராகவன், மார்க்கம்பட்டி முருகன் துணைச் செயலாளர்கள் ஆர்.தியாகராஜன், எம்.பிரசன்னா, ஏ.அழகேசன், கே.சீனிவாசன், ஜெ.ராம்குமார், எஸ்.வினோத்சாரதி கௌரவ ஆலோசகர்கள் ஏ.கே.எஸ்.எஸ். பொன்ராஜ, வி.ராமகிருஷ்ணன், குணசேகரன், குருசாமி மோகன், கன்னியப்பன், இரவிச்சந்திரன், எஸ் ராஜாராம் தலைமையிலான விழாக் கமிட்டியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.






