• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய அமைச்சர் சரத்குமார்..,

ByPrabhu Sekar

Jun 23, 2026

தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிறப்பு நலத்திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார் கலந்து கொண்டு, மருத்துவமனையில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும், குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்காக பழங்கள் மற்றும் குழந்தைகளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்களையும் வழங்கினார்.

முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், குழந்தைகளின் பெற்றோர்களும் உறவினர்களும் பங்கேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர். தொடர்ந்து, மருத்துவமனையின் பிரசவ வார்டில் சிகிச்சை பெற்று வந்த 38-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கும் அமைச்சர் சரத்குமார் நேரில் சென்று பழங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பரிசுப் பெட்டகங்களை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனிடையே, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்திருந்த பொதுமக்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். குறிப்பாக, சில பணியாளர்கள் எதற்கெடுத்தாலும் 500 ரூபாய் லஞ்சம் கேட்பதாகவும், பொதுமக்களிடம் மரியாதையற்ற முறையில் பேசுவதாகவும், செவிலியர்கள் நோயாளிகளை முறையாக கவனிப்பதில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

இந்த புகார்களை கேட்ட அமைச்சர் சரத்குமார், சம்பந்தப்பட்ட அரசு மருத்துவமனை நிர்வாகத்தினரை கண்டித்ததுடன், குற்றச்சாட்டுகள் குறித்து உடனடி விசாரணை நடத்த உத்தரவிட்டார். மேலும், இதுபோன்ற புகார்கள் மீண்டும் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

பொதுமக்கள் உரிய ஆதாரத்துடன் அரசு மருத்துவமனை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தால் என்னுடைய சட்டமன்ற அலுவலகத்தில் புகார் அளிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

மருத்துவ சேவைகள் பொதுமக்களுக்கு முழுமையான திருப்தியுடன் கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.