கோவையை அடுத்த குனியமுத்தூர், பி.கே. புதூர் பகுதியில் இயங்கி வரும் ‘ டெக்ஸ்டைல்ஸ்’ என்ற ஜவுளிக்கடையில் கடந்த மூன்று மாதங்களாக மேலாளராக பணிபுரிந்து வருபவர் முகமது கபீர் (வயது 55). இவர் குனியமுத்தூர் அர்ச்சனா நகர் பகுதியில் வசித்து வருகிறார். இதே கடையில் திருப்பூரைச் சேர்ந்த ஜியாவுல்ஹக் (வயது 55) என்பவரும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக ஜியாவுல்ஹக்குக்கும், மேலாளர் முகமது கபீருக்கும் இடையே வருகைப் பதிவு மற்றும் சம்பளம் வழங்குவது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் கடைக்கு வந்த ஜியாவுல்ஹக், மேலாளர் முகமது கபீரிடம் மீண்டும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை கடுமையாகத் திட்டி உள்ளார்.
வாக்குவாதம் முற்றியதில் கடும் ஆத்திரம் அடைந்த ஜியாவுல்ஹக், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து முகமது கபீரின் கழுத்தில் சரமாரியாக அறுத்து, கொலை மிரட்டல் விடுத்து உள்ளார். இதில் கழுத்தில் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சரிந்த முகமது கபீரை அங்கிருந்தவர்கள் மீட்டு, கோவையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதித்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து முகமது கபீரின் மனைவி ஜீனத் (47) அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட ஜியாவுல்ஹக்கை அதிரடியாக கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.





