• Sat. Feb 15th, 2025

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விதிமீறல்… சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள்

ByIyamadurai

Jan 27, 2025

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அனுமதியின்றி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் சில தினங்களாக பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வருகிறார். இதற்கு பெரியாரிய உணர்வாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதோடு, சீமானுக்கு எதிராக போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் சீமானுக்கு எதிராக திமுக, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் உள்பட பல்வேறு பெரியாரிய அமைப்பினர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து சீமான் மீது தமிழ்நாடு முழுவதும் 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஒரே நாளில் 4 வழக்குகள் சீமான் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக சார்பில் சந்திரகுமாரும், நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சீதாலட்சுமியும் போட்டியிடுகின்றனர். சீதா லட்சுமியை ஆதரித்து கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் முகாமிட்டு தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இரண்டாம் நாளான நேற்று முன்தினம் ஈரோடு காளைமாட்டு சிலை அருகே பிரசாரத்தை தொடங்கி மரப்பாலம், கச்சேரி ரோடு, மண்டபம் வீதி உள்ளிட்ட பகுதிகளில் தெருமுனை கூட்டங்களில் பேசினார்.

இந்த நிலையில் தேர்தல் அதிகாரியிடம் அனுமதி பெறாமல் பிரசாரத்தில் ஈடுபட்டதாக சீமான், வேட்பாளர் சீதாலட்சுமி உள்ளிட்ட 35 பேர் மீது தேர்தல் விதிமீறல், அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல் ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் மரப்பாலம் மற்றும் ஈவிகேஎஸ்.இளங்கோவனின் வீடு அருகே மண்டபம் வீதி ஆகிய இடங்களில் அனுமதி பெறாமல் பிரசாரம் செய்தல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சீமான் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது ஈரோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ஈரோடு பெரியார் நகரில் அனுமதி இன்றி பிரசாரம் செய்ததற்காக சீமான் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.சீமான் மீது ஒரே நாளில் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.