• Sat. Feb 15th, 2025

பாஜக ஆட்சியால் பேராபத்து… ப.சிதம்பரம் பேச்சு

ByIyamadurai

Jan 27, 2025

அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பாஜகவால் பேராபத்து வந்துள்ளது என காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் கூறியுள்ளார்..

மதுரை கோ. புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தினவிழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. ஆனால் நாட்டின் குடிமக்களுக்கான ஆட்சியாக அமைந்துள்ளதா என்றால் இல்லை. பாஜக அரசு பொறுப்பேற்ற பின்பு இந்தியா வளர்ச்சி பாதையில் செல்கிறது என பிரதமர் மோடி கூறி வருகிறார். இது ஏற்புடையதல்ல. காரணம், அவருக்கு முன்பு ஆட்சி செய்த ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட பிரதமர்கள் உருவாக்கிய அஸ்திவாரத்தில் தான் பாஜக இன்று பயணித்து வருகிறது.

இந்தியாவில் 144 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களில் 20 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். அவர்களின் விவசாயக் கடன், கல்விக் கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை பாஜக நிறைவேற்றுவதில்லை. ஆனால் பெருமுதலாளிகள் வங்கியில் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்கிறது. தற்போது, அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்புக்கு பாஜகவால் பேராபத்து வந்துள்ளது. அவற்றை பாதுகாக்க வேண்டும் என்றால் பாஜக ஆட்சியிலிருந்து அகற்றப்பட வேண்டும் என்றார்.