• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

குளவாய்பட்டியில் கனிமவளக் கொள்ளை-மக்களை நேரில் சந்தித்த அமைச்சர் பிரபு..,

Byமுகமதி

Jul 18, 2026

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள குளவாய்ப்பட்டி என்ற கிராமத்தில் புதிய கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் புதிதாகத் தோண்டப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் இறங்கி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

குளவாய்ப்பட்டி கிராமத்தில் ஏற்கனவே செயல்பட்டு வரும் சுவேதா கிரஷர் என்ற நிறுவனம், அரசுக்குச் சொந்தமான நிலத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாகக் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

மேலும், விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் கூலித் தொழிலை நம்பி வாழும் தங்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும்
கல்குவாரியில் பயன்படுத்தப்படும் அதிக சக்தி கொண்ட வெடிப்பொருட்களால் ஏற்படும் அதிர்வும், கடும் சத்தமும் காரணமாக கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்லவும், பொதுமக்கள் அப்பகுதியில் பாதுகாப்பாக பயணிக்கவும் அச்சம் நிலவுவதாக போராட்டக்காரர்கள் ஏற்கனவே மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட வருவாய் துறை அலுவலகங்களில் தெரிவித்திருந்தனர். அது குறித்து அதிகாரிகள் எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் தெரியவந்தது.

ஏற்கனவே செயல்பட்டு வரும் கல்குவாரிக்கு அருகே மேலும் புதிய கல்குவாரி அமைக்க மாவட்ட கனிமவளத்துறை அனுமதி வழங்கியுள்ளதாக இந்த ஊர் பொதுமக்களுக்குத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, இதற்கு எதிராக காரைக்குடியில் உள்ள கனிமவளத்துறை அமைச்சர் பிரபு வீடு& அலுவலகத்தை இன்று 18.07.226- ல் முற்றுகையிட்டு மனு அளிக்க கிராம மக்கள் முடிவு செய்திருந்தனர்.

ஆனால், அந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாகவும், நேற்று நள்ளிரவு காவல்துறையினர் கிராமத்திற்கு வந்து யாரும் அமைச்சர் அலுவலகம் செல்லக்கூடாது எனக் கூறி எழுத்துப்பூர்வமான உறுதிமொழி பெற்றதாகவும் பொதுமக்கள் பலரிடமும் தெரிவித்திருந்த நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே புதிதாக தோண்டப்பட்ட கல்குவாரி பள்ளத்தில் இறங்கி இன்று போராட்டம் நடத்துவதாக தீர்மானித்து அதை செயல் வடிவத்திலும் காண்பித்தனர்.இந்த போராட்டத்தில் ஆண்களும் பெண்களும் பள்ளி மாணவ மாணவியரும் என இன்று அந்த பள்ளத்தில் இறங்கி போராட்டம் நடத்தினர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில் சட்டவிரோதமாக அதிகளவில் கற்கள் வெட்டி எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதாகவும், ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளதாகவும் பொதுமக்களைக் காக்க வேண்டும் என்றால்
குளவாய்ப்பட்டி பகுதியில் நடைபெறும் கனிமவள அகழ்வுப் பணிகள் குறித்து மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாக விரிவான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், சட்டவிரோத கனிமவள அகழ்வில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டப்படும் சுவேதா கிரஷர் நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், புதிய கல்குவாரிக்கு எந்தவித அனுமதியும் வழங்கக்கூடாது என்றும் வலியுறுத்தி பொதுமக்கள் முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இவ்வாறு இந்த இடத்தில் பொதுமக்கள் போராடுகிறார்கள் என்பதை தமிழ்நாடு கனிமவளத்துறை அமைச்சர் மாண்புமிகு பிரபு அவர்கள் தனது திருச்சி பயணத்தின் போது அறிந்து கொண்டதால் திருச்சி செல்லாமல் உடனடியாக குளவாய்ப் பட்டி கிராமத்திற்கு தனது காரை திரும்பச் சொல்லி அந்த இடத்தை தேடி கண்டுபிடித்து சென்றிருக்கிறார்.

அப்போது தாங்கள் எந்த காரணங்களை முன்வைத்து போராட்டம் நடத்தினார்களோ அதை அமைச்சர் பிரபு அவரிடம் பொதுமக்கள் தெரிவித்திருக்கிறார்கள். அவற்றை எல்லாம் பொறுமையாக கேட்டு அறிந்து கொண்ட அமைச்சர் அதிகாரிகளிடமும் துறை சார்ந்த வல்லுநர்களிடமும் கேட்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றிருக்கிறார். அமைச்சரைத் தேடி மக்கள் செல்லும் நிலையில் இருந்ததை இப்போது சற்று மாறுதலாக மக்கள் போராட்டம் நடத்திய இடத்திற்கே அமைச்சர் வந்து சென்றது மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கிறது.