



ஹோலி பண்டிகையின் போது ஏற்பட்ட வண்ணக்கலவையை ஆற்றில் கழுவச் சென்ற நான்கு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகேயுள்ள தானே மாவட்டத்தின் சாம்டோலி பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவர்கள் நான்கு பேர் ஹோலி பண்டிகையான நேற்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது உடை, உடலில் வண்ணக்கலவை அப்பிக் கொண்டது. இதனைக் கழுவுவதற்காக பத்லாப்பூர் மாவட்டத்தில் உள்ள உல்ஹாஸ் ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அதில் ஒரு சிறுவன் நீரில் மூழ்கினான். இதனைக் கண்ட மற்ற சிறுவர்கள் அவனைக் காப்பாற்றச் சென்றனர். ஆனால், நீச்சல் தெரியாததால் நான்கு பேரும் நீரில் மூழ்கினர். இதனைப் பார்த்த கரையில் இருந்த சிலர், காவல் துறை மற்றும் சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஆற்றில் மூழ்கிய சிறுவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு மணி நேர தேடுதலுக்குப்பின் ஆர்யன் மேதர்(15), ஓம்சிங் தோமர்(15), சித்தார்த் சிங்(16), ஆர்யன் சிங்(16) ஆகிய நான்கு சிறுவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக பத்லாப்பூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஒரே நேரத்தில் ஆற்றில் மூழ்கி நான்கு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம், ஹோலி பண்டிகையன்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

