
கேரளாவில் 3 வயது சிறுமி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தில் குழந்தையின் தாயை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரள மாநிலம் கொச்சி திருவாங்கூளம் மூழிக்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்தியா. குடும்பப் பிரச்னைகள் காரணமாக கடந்த சில மாதங்களாக சந்தியா தனது தாய் வீட்டில் மூன்று வயது மகள் கல்யாணிஉடன் தங்கியிருந்தார்.

இந்நிலையில் நேற்று மாலை சுமார் 7 மணியளவில் திருவாங்கூளத்தில் இருந்து தனது தாயுடன் சென்ற கல்யாணியை காணவில்லை என்று முதன் முதலில் தகவல் வெளியானது. சந்தியா தனது குழந்தையை அங்கன்வாடியில் இருந்து அழைத்து வருவதற்காகச் சென்றதாகவும், ஆனால் திரும்பி வரும்போது குழந்தை அவருடன் இல்லை என்றும் தெரியவந்தது.
இதையடுத்து, செங்கமநாடு போலீசார் உடனடியாக விசாரணையைத் தொடங்கினர். கண்காணிப்பு கேமராவில் சந்தியா குழந்தையை தூக்கிக் கொண்டு செல்வது தெரியவந்தது. சந்தியாவை காவலில் எடுத்து தீவிரமாக விசாரித்ததில், அவர் மூழிக்குளம் பகுதியில் உள்ள பாலத்தின் அருகே குழந்தையை விட்டுச் சென்றதாக தெரியவந்தது.
வானிலை மோசமாக இருந்த போதிலும், போலீசார் இரவில் வழக்கமான பாதுகாப்பு நடைமுறைகளைத் தாண்டி சிறுமி கல்யாணியை தீவிரமாகத் தேடினர். சந்தியாவை சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று அவர் குறிப்பிட்ட இடத்தில் போலீசார் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஒரு சில மணி நேரம் நீடித்த இந்தத் தேடுதலின் முடிவில், மூழிக்குளம் பாலத்தின் அடியில் ஆற்றில் இருந்து சிறுமி கல்யாணியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதை அடுத்து சிறுமியின் தாய் சந்தியாவை தற்போது போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
