வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து நின்று 25 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை ஆலோசனை கூட்டத்தில் பேசினார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் புதிய நிர்வாகிகளை நியமித்தார். அவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. அதில் பங்கேற்ற அண்ணாமலை பேசியதாவது:
“லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து பகுதிகளிலும் புதிய நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த வேண்டும். குறைந்தது, 25 முதல் அதிக நபர்களை உறுப்பினர்களாக சேர்ப்போருக்கு கட்சி விதிப்படி பொறுப்பு வழங்கலாம்.ஒவ்வொரு தொண்டரும் தங்கள் பகுதியில் உள்ள 25 நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க வேண்டும். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.திமுக உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் சமயத்தில் தான் மக்களிடம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளன. ஆனால், பாஜக அப்படிப்பட்ட கட்சி அல்ல. எனவே, கட்சியினர் தினமும் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.மத்திய அரசு ஏழைகளுக்கு வீடு, விவசாயிகளுக்கு நிதியுதவி என பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளது. அவற்றை தான் தமிழக அரசு செயல்படுத்துகிறது.தமிழகத்தில் மேற்கொள்ளப்படும் மத்திய அரசின் திட்டங்கள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை மக்களிடம் சேர்க்க வேண்டும்.பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே வானொலியில் உரையாற்றும் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் சிறப்பான சேவை குறித்து தொடர்ந்து பேசி வருகிறார். அந்நிகழ்ச்சியை மக்களிடம் பிரபலப்படுத்த வேண்டும்.கூட்டணி விவகாரத்தை தேசிய தலைமை முடிவு செய்யும். தமிழக பாஜக தனித்து போட்டியிட்டாலும் 25 தொகுதிகளில் வெற்றி பெறும் வகையில் இப்போதே பணிகளை துவக்க வேண்டும்” என்று கூறினார்.