
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய பாசன முக்கிய ஆதாரமாக விளங்கி வருகிறது. நீர்பிடிப்பு பகுதியில் பெய்த தொடர் மழையாலும், பெரியார் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாலும் வைகை அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வந்தது. தற்போது வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது.
இதனால் அணைக்கு வரும் 1000 கன அடி தண்ணீர் அப்படியே மதகுகள் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீரானது இன்று மதுரை யானைகள் பாலம் அருகே வந்தடைந்தது. இதனால் மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பில் மதுரை வைகை ஆற்றங்கரை ஓரம் இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதோடு வைகை ஆற்றுக்குள் ஆடு மாடுகளை பொதுமக்கள் மேய்த்து வருகின்றனர் மேலும் துணிகளை துவைத்து வருகின்றனர். வைகை ஆற்றில் வெள்ளம் வரும் என்பதால் மதுரை மாநகராட்சியின் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆடு மாடு மற்றும் துணி துவைப்பது உள்ளிட்டவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை கொடுத்து வருகின்றனர்.
