• Fri. Mar 29th, 2024

யுவராஜின் 12-ம் நம்பர் ரகசியம்.!! சுவாரஸ்ய பின்னணி

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் தூணாக இருந்த யுவராஜ் சிங் (Yuvraj Singh), இன்று 40-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார்.


ஒரு கிரிக்கெட் பிளேயராக, இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த அவர், மற்றொரு வீரரால் முறியடிக்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். முதல் 20 ஓவர் உலகக்கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 சிக்சர்களை விளாசியது, 2011 ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை வென்றபோது, தொடர்நாயகன் விருதை பெற்றது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தான சாதனைகளாகும்.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என 3 உலகக்கோப்பைகளை வெற்றிபெற்ற இந்தியஅணியில் இடம்பிடித்த ஒரே வீரர் யுவராஜ் சிங் மட்டுமே. 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்த அவருக்கு, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் எழுந்துநின்று கைத்தட்டல் கொடுத்து வாழ்த்தியுள்ளனர்.

இது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட யுவராஜ் சிங், தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார்.
இந்திய அணிக்காக யுவராஜ் சிங் விளையாடியபோது அவர் அணிந்திருந்த ஜெர்சி எண் 12. இதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யான செய்தி ஒன்று உண்டு. அவர் பிறந்த தினம் 12, மாதமும் 12. அதாவது டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அவருடைய பிறந்தநாள். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், யுவராஜ் சிங் பிறந்த நேரமும் பிற்பகல் 12. அவர் பிறந்த மருத்துவமனை அமைந்திருந்த இடமும் சண்டிகரில 12வது வீதியில் இருந்துள்ளது.

கிரிக்கெட் வீரராக உருவெடுப்பதற்கு முன் பள்ளியில் ஸ்கேட்டிங் வீர ராக இருந்துள்ளார் யுவராஜ் சிங். 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்ப்யன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். அவருடைய அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப கிரிக்கெட் விளையாடிய அவர், அதில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தேர்வானார். யுவராஜ் சிங்கிற்கு பிடித்த மற்றொரு விளையாட்டு டென்னிஸ்.


யுவராஜ் சிங்கின் அப்பா யோகராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், புகழ்பெற்ற பஞ்சாபி நடிகர். இதனால், யுவராஜ் சிங் குழந்தையாக இருந்தபோது ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற கவுன்டி கிரிக்கெட் அணிகளில் ஒன்றான யாக்ஷைர் அணிக்காக, இந்தியாவில் இருந்து 2 வீரர்கள் மட்டுமே விளையாடியுள்ளனர். ஒருவர் சச்சின், மற்றொருவர் யுவராஜ் சிங். விளையாட்டு பொழுபோக்குகளை கடந்து சமூக அக்கறை கொண்ட யுவராஜ் சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர். அதன்பிறகு “YOU WE CAN’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, அவரைப்போல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *