விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள சித்ராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுசீந்திரன் (34). இவரது மனைவி ஷீலாராணி (25). இவர்களுக்கு 10 மாத பெண் குழந்தை உள்ளது. சுசீந்திரன் பட்டாசு மற்றும் அச்சகங்களுக்கு முகவராக வேலை பார்த்து வருகிறார். ஷீலாராணி அழகு கலை நிபுணராக வேலை பார்த்து வந்தார். ஷீலாராணிக்கு, திருமணம் செய்வதற்கு முன்பாகவே முகமதுயாசீப் என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. திருமணம் முடிந்த நிலையிலும் இந்த தகாத பழக்கம் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திருத்தங்கல், சத்யா நகரில் உள்ள ஒரு வீட்டிற்கு அழகு கலை வேலைக்குச் செல்வதாக கூறிச் சென்ற ஷீலாராணி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது போனும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. மனைவியை பல இடங்களில் தேடிப் பார்த்தும் சுசீந்திரனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. மனைவி காணாமல் போனது குறித்து அவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், ஷீலாராணியின் செல்போனிற்கு வந்த அழைப்புகளைக் கொண்டு தீவிர விசாரணை செய்தனர். போலீசார் விசாரணையில் ஷீலாராணியுடன், சிவகாசி அருகேயுள்ள ரிசர்வ்லைன் பகுதியைச் சேர்ந்த முகமதுயாசீப் கடைசியாக பேசியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக முகமதுயாசீப்பை பிடித்து போலீசார் விசாரித்தனர். போலீசார் விசாரணையில் ஷீலாராணியுடன் நீண்ட நாட்களாக தகாத உறவில் இருப்பதும், அவருக்கு நிறைய பணம் கொடுத்ததாகவும், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டபோது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாகவும், இதனால் அவரை வரவழைத்து, ஆத்திரத்தில் கழுத்தை நெறித்து கொலை செய்து அந்தப் பகுதியில் இருந்த கிணற்றில் உடலை வீசியதாகவும் கூறியுள்ளார். மேலும் ஷீலாராணி உடல் வீசப்பட்ட கிணற்றையும் அவர் அடையாளம் காட்டினார். சிவகாசி – விருதுநகர் சாலையில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்த பாழுங்கிணற்றில், ஷீலாராணியின் உடல் மிதந்ததை போலீசார் பார்த்தனர். தீயணைப்பு வீரர்களை வரவழைத்து ஷீலாராணியின் சடலம் மீட்கப்பட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சம்பவம் நடந்து 12 நாட்களானதால் மீட்கப்பட்ட சடலம் அழுகிய நிலையில் இருந்தது. பிடிபட்ட முகமதுயாசீப்பை, திருத்தங்கல் காவல்நிலைய போலீசார் கைது செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.
தகாத உறவால், அழகுகலை நிபுணரான இளம்பெண் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் 12 நாட்களுக்கு பின்பு அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.