• Fri. Apr 26th, 2024

மாங்கல்ய தோஷம் கழிப்பதாகக் கூறி நகை மோசடி செய்த பெண் கைது..!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் மாங்கல்ய தோஷம் கழிப்பதாக 22 பவுன் நகையை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடத்தை சேர்ந்தவர் கஸ்தூரிராஜன். இவருடைய மனைவி சுஜிதா (34). இவருக்கு, நாகர்கோவிலை சேர்ந்த 49 வயது பெண் கிரிஜா என்ற பெண்ணுடன் கோவிலில் வைத்து நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. அப்போது சுஜிதா தான் ஒரு சாமியார் என்று கூறியுள்ளார். பின்னர் மகளுக்கு திருமணவரன் தடைபடுவதாக சுஜிதாவிடம் கிரிஜா கூறியுள்ளார். அதை சாதமாக பயன்படுத்திக் கொண்ட சுஜிதா கிரிஜாவின் இரண்டு மகள்களுக்கும் மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், இதனால் அவருடைய 2 மகள்களுக்கும் திருமணமே ஆகாது என்றும் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெண் கிரிஜா தோஷத்தை நீக்க என்ன செய்ய வேண்டும் என்று சுஜிதாவிடம் கேட்டுள்ளார்.

மேலும், தோஷத்துக்கு பரிகாரமாக என்ன வேண்டுமானாலும் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்றும் கூறியதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட சுஜிதா அந்த பெண்ணிடம் பரிகார பூஜை நடந்த வேண்டும் என்று கூறி அவரிடம் இருந்த நகையை கேட்டுள்ளார். முதலில் தன்னிடம் இருந்த கொஞ்ச நகையை சுஜிதாவிடம் கொடுத்துள்ளார்.

பின்னர் பூஜை, வேண்டுதல் என்று கூறி கடந்த 8 மாதங்களாக கொஞ்சம் கொஞ்சமாக அந்த பெண்ணிடம் இருந்து நகைகளை சுஜிதா அபகரித்து இருக்கிறார். அதிலும் கடைசியாக 8 பவுன் கவரிங் நகையை கொடுத்து விட்டு, அந்த பெண்ணிடம் இருந்து ஒரிஜினல் நகையை சுஜிதா வாங்கியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த விவகாரத்தை யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொள்ளும்படியும் கூறியிருக்கிறார். இவ்வாறு மொத்தம் 22 பவுன் நகையை சம்பந்தப்பட்ட பெண்ணிடம் இருந்து சுஜிதா வாங்கி அபகரித்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று அந்த பெண்ணின் நகையை அவருடைய கணவர் கேட்டுள்ளார். அப்போது தான் நகையை சுஜிதா அபகரித்த விவரம் தெரியவந்தது. பின்னர் இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் வடசேரி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுஜிதாவை கைது செய்து, அவர் அபகரித்த 22பவுன் நகை மீட்கப்பட்டது. கைது செய்யப்பட்ட சுஜிதா இதே போல மேலும் பலரை ஏமாற்றி நகை மற்றும் பணத்தை அபகரித்து இருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *