தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார். விரைவில் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல்,2024 நாடாளுமன்ற தேர்தல் வியூகப் பணி பிரசாந்த் கிஷோர் வசம் ஒப்படைக்கப்படும் என தெரிகிறது.
அரசியலை அறிவியல் பூர்வமாக பயன்படுத்தி இந்தியாவில் பா.ஜ.க. உள்ளிட்ட பல கட்சிகளுக்கு வெற்றிகளை உருவாக்கி தந்தவர் பிரசாந்த் கிஷோர்.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக தேர்தல் வியூகங்களை வகுத்துக் கொடுத்தார். அதன் பின் மேற்கு வங்கம், தமிழகம், டெல்லி என பல மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பணியில் பங்கேற்று வெற்றி கண்டவர் பிரசாந்த் கிஷோர். இதன் பின்னர் காங்கிரஸில் அவர் இணைவதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் காங்கிரஸில் இணையவில்லை.
சமீபகாலமாக அவர் காங்கிரஸ் கட்சியையும், நேரு குடும்பத்தினரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் விமர்சனங்களை முன் வைத்தார். மேலும் வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜகவை வெல்லும் திறன் காங்கிரஸுக்கு இல்லை எனவும், பிரசாந்த கிஷோர் விமர்சித்தார்.
காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்கும் முயற்சியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி , தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் உள்ளிட்டோரை பிரசாந்த் கிஷோர் சந்தித்தார்.
ஆனால் திடீர் திருப்பமாக சில தினங்களுக்கு முன் பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளார்.
சோனியா காந்தியின் இல்லத்தில் கடந்த சனிக்கிழமை உயர்மட்ட காங்கிரஸ் கூட்டம் நடந்தது. பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலரும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பிரசாந்த் கிஷோரை கட்சியில் சேர்ப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த 10ஆண்டுகளாக தொடர் தோல்விகளையும்,பல சிக்கலையும் எதிர்கொண்டுவருகிறது காங்கிரஸ் கட்சி. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தன்னை நிருபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.2024 நாடாளுமன்ற தேர்தல் முன்னோட்டமாக குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் பணிகளை பிரசாந்த் கிஷோர் கவனிப்பார்.அவர் கூறும் ஆலோசனைகளை ஏற்க காங்கிரஸ் தலைமையும், நேரு குடும்பத்தினரும் தயாராகி வருகின்றனர்.
பிரசாந்த் கிஷோரின் வியூகம் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிக்கு வழிவகுக்குமா?