• Fri. Mar 29th, 2024

தி.மு.க ஆட்சிக்கு விரைவில் ஆபத்து..,
பகீர் கிளப்பும் டிடிவி தினகரன்..!

Byவிஷா

Apr 16, 2022

மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக என்றும், அதன் ஆட்சிக்கு விரைவில் ஆபத்து ஏற்படும் என்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மோடி குறித்து இளையராஜாவின் கருத்துக்கு பதிலளித்த அவர், இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர் என கூறினார்.
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு அதிரடி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகிறது. மக்கள் அத்திட்டங்களை வரவேற்று பாராட்டி வரும் அதே நேரத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என்ற அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இதே போன்ற குற்றச்சாட்டை அமமுக கட்சி பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் கூறிவருகிறார். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் நடைபெற்றது. அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த கட்சி திமுக, தற்போது 150 சதவீதம் சொத்து வரியை உயர்த்தி மக்கள் மீது கடுமையான வரிச் சுமையை சுமத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பிரச்சினைகளுக்காக போராடும் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் திமுகவின் கூட்டணி கட்சிகள் இந்த வரி உயர்வை கண்டித்து ஏன் போராடவில்லை என கேள்வி எழுப்பினார்.
பெட்ரோல் டீசல் விலையை குறைக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சிக்கு வந்த திமுக ஒரு தீயசக்தி என்றார். திமுகவை எதிர்த்து தமிழக மக்களுக்காக அமமுக போராடி வருகிறது என்றார்.
அம்பேத்கர் பிறந்த தினத்தன்று சென்னை கோயம்பேட்டில் பாஜக விசிக மோதிக்கொண்டது காட்டுமிராண்டித்தனம் என்றார். திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது என்ற அவர், கூடிய விரைவில் திமுகவின் ஆட்சிக்கு ஆபத்து நேரிடும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், அமலாக்கத்துறை மீண்டும் விசாரணைக்கு அழைத்தால் ஆஜராக தயாராக இருக்கிறேன் என்றார். அம்பேத்கர்-மோடியை ஒப்பிட்டு இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்த கருத்து குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், இளையராஜா அரசியலுக்கு அப்பாற்பட்டவர். அது அவருடைய தனிப்பட்ட கருத்து என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *