• Sun. Oct 1st, 2023

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை?

நவீன தமிழ்க்கவிதைகளில் ஏன் பெரியார் இல்லை? இப்படி ஒரு கேள்வியைக் கவிஞர் ஷங்கரராம சுப்பிரமணியன் எழுப்பியிருந்தார். நல்ல கேள்வி; முக்கியமான கேள்வி. எனக்கும்கூட இந்தக் கேள்வி அவ்வப்போது எழுந்ததுண்டு. பொதியவெற்பன், ராஜன்குறை மற்றும் சிலர் இதற்கான பதில்களையும் இடையீடுகளையும் முன்வைத்திருந்தனர். பொதியவெற்பனின் பின்னூட்டத்தில் சில நண்பர்கள் ஷங்கர் பெரியாருக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதாக ஆவேசமாகவும் எதிர்வினையாற்றியிருந்தனர். நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு நவீன கவிஞர் என்ற முறையில் பெரியார் நவீன கவிதையில் ஏன் இல்லை என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதில்களைத் தேட முனைந்திருக்கிறார் என்றே கருதுகிறேன். நானும் இப்படி சிந்தித்துப் பார்த்ததில் உருவான எண்ணங்கள் இவை. யாரும் மாறுபடலாம்.

தமிழில் ‘நவீன இலக்கியம்’ என அறியப்பட்ட இலக்கிய வகைமையின் முன்னோடிகள் பார்ப்பனர்கள் மற்றும் ‘உயர்’சாதியினர். இவர்கள் புற எதார்த்தத்தை விடவும் அகவுணர்ச்சிகளுக்கும் அரசியலை விடவும் அழகியலுக்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்கள். இவர்களின் அளவுகோலில் திராவிட இயக்கம் மற்றும் திராவிட இயக்க கலை, இலக்கியம் என்பதே அழகியலுக்கு எதிரானதொன்று. எனவே இவர்களின் படைப்புகளில் பெரியார் இல்லாமல் போனது ஆச்சரியமொன்றுமில்லை. ஆனால் இந்த ஒரு பதிலோடு நாம் திருப்தியடைந்துவிட முடியாது. ஏனெனில் ‘நவீன’ இலக்கியம் மட்டும் பெரியாரைப் புறக்கணித்துவிடவில்லை.

பெரியார் என்னும் அடையாளத்தைப் பாடுபொருளாகக் கொண்டுவந்தவர்கள் பெரும்பாலும் மரபுக்கவிஞர்களே. இதில் பாரதிதாசன் பரம்பரைக் கவிஞர்களுக்கு முக்கியமான இடமுண்டு. மரபுக்கவிதையை மறுத்துத் தோன்றிய – ‘நவீன’ இலக்கியவாதிகள் ஏற்காத- இடதுசாரி முற்போக்குக் கருத்துகளை முன்வைத்த வான்மபாடிக் கவிதைகளிலும்கூட பெரியார் பெருமளவு இருந்ததில்லை.

பாரதியும் காந்தியும் பாடுபொருளாக இருந்தளவுக்குப் பெரியார் வானம்பாடிக் கவிதைகளில் பாடப்பட்டதில்லை. பெயருக்குப் பின்னால் பாரதி என்னும் ஒட்டைச் சேர்த்துகொண்ட கவிஞர்கள் உருவானது வானம்பாடி மரபில் இருந்துதான். ‘தேசப்பிதாவுக்குத் தெருப்பாடகனின் அஞ்சலி’ முதல் ‘கவிராஜன் கதை’ வரை உருவாக்கியவர்கள் பெரியார் குறித்து பெரிதாக எழுதியதில்லை. இதில் சில கவிஞர்கள் கலைஞர் கருணாநிதியுடன் பல கவியரங்கங்களில் பங்கேற்றுப் பாடியவர்கள். ஆனால் தனிக்கவிதைகளில் அவர்கள் பெரியார் பற்றி எழுதியது குறைவு அல்லது இல்லவே இல்லை.

திராவிட இயக்க ஆதரவாளராகக் காட்டிக்கொள்ளும் வைரமுத்துகூட தன் கவிதைகளில் பெரியார் பற்றி அதிகம் எழுதியதில்லை. பாடல்களில் ‘பெரியார் சொன்ன வெங்காயம்’ என்பதைப் போல் சம்பந்தமில்லாமல் சில துணுக்குகளில் பெரியார் எட்டிப்பார்த்திருக்கிறார். திராவிட இயக்கம் குறித்த மணிரத்னத்தின் ‘இருவர்’ திரைப்படப் பாடலில்கூட ‘மீசைகள் எல்லாம் பாரதியா?’வுக்கு முன்பு ‘தாடிகள் எல்லாம் தாகூரா?’ என்றுதான் வைரமுத்து எழுதினாரே தவிர ‘தாடிகள் எல்லாம் பெரியாரா?’ என்று எழுதியதில்லை.

பாலச்சந்தர் மட்டுமல்ல, பார்ப்பன எதிர்ப்பு, மத மறுப்பு, பெண்ணுரிமை பேசிய பாரதிராஜா படங்களிலும்கூட பாரதியார்தான் ஆதர்ச நாயகனே தவிர பெரியார் அல்ல. பாலச்சந்தர், பாரதியாரை விடுவோம், எம்.ஜி.ஆர் திரைப்படங்களில்கூட காந்தி, புத்தர், யேசு, அண்ணா அடையாளங்கள் காட்சிப்படுத்தப்பட்ட அளவுக்கு பெரியார் ஓர் அடையாளமாக காட்சிப்படுத்தப்பட்டதில்லை. எனவே ‘நவீன’ இலக்கியம் என்றில்லை, வெகுஜன இலக்கியம், வெகுஜன திரைப்படம் என எதிலும் பெரியார் என்னும் அடையாளம் அதிகம் இருந்ததில்லை. என்ன காரணம்?

மகாபலிபுரம் தொடங்கி கண்காட்சிகள் வரை சிலைகள் அதிகம் விற்கப்படும் இடங்களைக் கவனித்திருக்கிறேன். அதிகம் விற்பனையாகும் சிலைகள் இரண்டுதான். புத்தர் மற்றும் விநாயகர். மதம், சிறுபிள்ளைத்தனம் ஆகியவற்றின் அடையாளம் விநாயகர் என்றால் சாந்தம், அழகியல், தியானம் ஆகியவற்றின் அடையாளமாகப் புத்தர் பார்க்கப்படுகிறார். ஒரு தலித் கலைநிகழ்வில் இருக்கும் புத்தர் வேறு; நட்சத்திர விடுதியின் வரவேற்பறையில் இருக்கும் புத்தர் வேறு. புத்தர் சிலைகளை வாங்கிக்குவித்து தன் வீட்டை நிரப்பிக்கொள்பவர்களில் பெரும்பாலோருக்குப் புத்தர் ஒரு வேதமறுப்பாளர் என்று தெரியாது.

புத்தர், பாரதி, காந்தி, யேசு போன்ற உருவங்களின்மீது பொதுப்புத்தியில் நிலவும் கருத்துகளே அவர்களை எல்லா இடங்களுக்கும் கொண்டு சேர்த்திருக்கின்றன. ஆழமும் விமர்சனமும் அற்ற மேலோட்டமான இந்தப் பொதுப்புத்தி பார்வையில் இருந்துதான் இந்த அடையாளங்களை வெகுஜன சினிமாக்களில் இருந்து நவீனகவிதை வரை ஏற்றிருக்கின்றன. புத்தர் என்றால் கருணை, பாரதி என்றால் கவிதை, ரௌத்திரம், புதுமைப்பெண், காந்தி என்றால் நேர்மை, அஹிம்சை, யேசு என்றால் அன்பு.

பெரியாரை இப்படி சாராம்சமான பொது அடையாளங்களில் அடைத்துவிட முடியாது என்பதுதான் சிக்கல். பெரியார் என்றால் தீவிரம். பெரியார் என்றால் மறுப்பாளர். பெரியார் என்றால் வெகுஜன அபிப்பிராயங்களுக்கு விரோதி. ஷங்கர்ராம சுப்பிரமணியன் சொல்வதைப் போல் பெரியார் என்பது கருந்துளையல்ல. அது ஒரு எதிர் நீரோட்டம். அந்த நீரோட்டத்தைத் தாங்குவதற்கு நம் வீடுகளைத் தயார்ப்படுத்த வேண்டும். ஏனென்றால் எல்லாப் படங்களையும்போல் அது சமர்த்தாக சுவரில் தொங்கிவிட்டுப்போவதில்லை. அது பல சமயங்களில் நம் வீட்டின் முகத்தை மாற்றியமைத்துவிடுகிறது. அது நமக்கும் நம் வீட்டுக்கும் ஓர் அடையாளத்தைக் கொடுத்துவிடுகிறது. அது விரும்பத்தக்க அடையாளமல்ல.

மற்ற அடையாளங்களைப் போல் தீவிரத்திலிருந்து பெரியாரைக் கழட்டிவிட முடியாது. தீவிரத்தைக் கழித்துவிட்டால் அவர் தாடியை மழித்த பெரியாரைப் போல் அடையாளமே இல்லாமல் போய்விடுவார். நட்சத்திரவிடுதி வரவேற்பறை முதல் நவீன கவிதை வரை தீவிரமற்ற பொது அடையாளங்களே தேவை. ஏனெனில் விடுதலைக்கு முந்தைய பேருந்து நிலையத்தில் இறங்கி விடுவதற்குத் தீவிரங்கள் தேவையில்லையே!

நமது நவீன கவிஞர்களுக்குத் தீவிரமான எதார்த்தம் தேவையில்லை. அவர்கள் கவிதைகளில் மார்க்ஸ், பிரெக்ட், பிராய்ட், நீட்ஷே ஆகியோர்கூட தீவிரமற்று கவிதைக்கான கச்சாப்பொருளாக உருமாறிவிடும் சாத்தியங்களுடன் மட்டும்தான் பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இப்படி பெரியாரை உருமாற்றிவிட முடியாத சிக்கல் நவீனக்கவிஞர்களுக்கு இருக்கிறது.

‘நவீன கவிதைகளில் பெரியார் இல்லாமல் போனதற்கான ‘ ஷங்கரின் காரணங்கள் மூன்றை நான் மறுக்கிறேன்.

‘அழகுக்கும் அழகியலுக்கும் எதிரானவர் என்பதால் பெரியார் கவிதையில் இடம்பெறவே இல்லாமல் போனாரா?’ என்கிற கேள்வியை எழுப்புகிறார் அவர். இப்படி தொகுத்துக்கொள்ளலாம். தர்க்கங்களின் அடிப்படையில் தன் செயற்பாடுகளை முன்வைத்த பெரியாரை, தர்க்கங்களின் எல்லைகளை மீறும் கவிதைக்குள் கொண்டுவர முடியுமா? பெரியார் மொழியின் மீதும் இலக்கியங்கள் மீதும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தவர். அவரை அதே மொழி, இலக்கியத்துக்குள் கொண்டுவர முடியுமா?

பெரியார் மொழியையும் இலக்கியங்களையும் கடுமையாக விமர்சித்தார்தான். ஆனால் அவர் காலத்தில்தான் பாரதிதாசன் என்ற மகாகவி அவருடன் இருந்தார். ‘அழகின் சிரிப்பு’ என்னும் நூலையும் படைத்தார். கலைஞர், அண்ணா, எம்.ஆர்.ராதா என்று கலையையும் இலக்கியங்களையும் கருவிகளாக்கிக்கொண்டவர்கள் பெரியார் பாசறையில் வளர்ந்தவர்களே. மேலும் ஒருவரை நவீன கவிதைக்குள் கொண்டுவர இலக்கியம் குறித்த அவரது பார்வை எப்படி தடையாக இருக்க முடியும்?

காந்தியை வரைந்த ஆதிமூலம் பெரியாரை வரையவில்லை என்பதையும் ஷங்கர் நினைவுபடுத்துகிறார். தனபாலின் பெரியார் சிற்பத்தை அவர் மறந்துவிட்டார். மருது பெரியார் குறித்து எண்ணற்ற ஓவியங்களை வரைந்திருக்கிறார். இன்று சமூகவலைத்தளத்தில் அதிகம் பகிரப்படும் ஓவியங்களில் ஒன்று பெரியார் ஓவியங்கள். பெரியாரைத் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப விதவிதமான வடிவங்களில் அடையாளங்களாக மாற்றியிருக்கிறார்கள். இதை ஏன் நவீன கவிஞர்களால் செய்ய முடியவில்லை? இன்றைய சமூகவலைத்தளத்தில் அரசியல் உரையாடலும் தீவிரமும் பரவலாகும்போது பெரியார் அடையாளமும் பரவலாகிறது. இன்றைய சினிமாக்கள் தீவிரமடையும்போது பொதுப்புத்தி தாண்டிய நேரடியான உரையாடலை அவை முன்வைக்கும்போது திரைப்படங்களிலும் பெரியார் காட்சிப்படுத்தப்படுகிறார்.

பெரியார் எழுத்தில் படிமங்களோ, கவித்துவமோ உண்டா என்ற கேள்வியை எழுப்பி ‘தான் படித்தவரை இல்லை’ என்கிறார் ஷங்கர். நேர்மையான பதில். ஷங்கர் இன்னும் பெரியாரை நிறைய படிக்க வேண்டும்.

பெண்கள் பிள்ளை பெறுவதை நிறுத்தவேண்டும் என்று சொன்ன பெரியாரிடம் ‘அப்படியானால் மனித சமூகம் எப்படி விருத்தியடையும்?’ என்று கேட்கப்பட்டது. ‘மனித சமூகம் விருத்தியடையாவிட்டால் என்ன, புல், பூண்டு மற்ற ஜீவராசிகள் விருத்தியடையட்டுமே! இதுவரை விருத்தியடைந்த மனித ஜீவராசிகளால் பெண்களுக்கு என்ன நன்மை?’ என்பதில் தர்க்கங்கள் தாண்டிய கவித்துவமில்லையா? பெரியார் நாகம்மைக்கு எழுதிய இரங்கல் அறிக்கையைப் போன்ற கவித்துமான இரங்கலை இதுவரை எந்தத் தமிழ் நவீன எழுத்தாளரும் எழுதி நான் பார்த்ததில்லை.

நவீன இலக்கியங்களில் பெரியார் இல்லாமல் போனதற்கு பெரியாரிஸ்ட்களும் ஒரு காரணம். பாரதிதாசன் முதல் பெருஞ்சித்திரனார் வரை வந்தவர்கள் அதைத்தாண்டி நவீன இலக்கியங்களைப் படிக்கவில்லை. இலக்கியங்கள் குறித்த பெரியாரின் பார்வைகளின் எதிரொலிப்பும் நவீன இலக்கியங்கள் புரியவில்லை என்ற ஒவ்வாமை உணர்வும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் ஆச்சர்யகரமாகப் பெரியாரின் சிந்தனைகளில் இருந்த நவீனக்கூறுகளை மறுவாசிப்பு செய்து, அதைக் கோட்பாட்டாக்கம் செய்து, பெரியாரின் பொருத்தப்பாட்டை முன்வைத்தவர்கள் சிறுபத்திரிகைகளில் எழுதிய அறிவுஜீவிகளே. இவர்கள் மார்க்சிய பின்னணி கொண்டவர்கள். எஸ்.வி.ஆர், அ.மார்க்ஸ், ரவிக்குமார், பொ.வேல்சாமி, ராஜன்குறை, வ.கீதா எனப் பலரும் பெரியாரின் நவீனச் சிந்தனை குறித்து விரிவான உரையாடலை முன்வைத்தார்கள். ஆனால் இதை நவீன கவிஞர்கள் உள்வாங்கிக்கொண்டார்களா?

தேசியம், பாலுறவு சுதந்திரம், குழந்தைப்பேறு, குடும்ப அமைப்பு, விமர்சன உரிமை, அரசு மறுப்பு எனப் பலவற்றிலும் நவீனச் சிந்தனைகளை முன்வைத்தவர் பெரியார். ஆனால் அவரை நாங்கள் எந்த இடத்திலும் பாடுபொருளாக வைத்ததில்லை என்று சொல்வதற்கு ‘நவீன’ கவிஞர்கள் என்பவர்கள் வெட்கமுற வேண்டாமா?

இப்போது திராவிட இயக்கத்தில் இருக்கும் நவீன கவிஞர்களாவது இதை முன்னெடுத்திருக்கலாம். பாரதிதாசன் மரபிலக்கியத்தில் செய்ததை நவீன கவிதையில் இவர்கள் மேற்கொண்டிருக்கலாம். ஆனால் கெடுவாய்ப்பாக அவர்கள் பாடுபொருளின் முன்னுரிமை வேறாக இருக்கிறது.

நவீன எழுத்தாளர்களுக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம் என்பதைவிட நவீன எழுத்தாளர்களுக்கும் நவீனத்துக்குமாவது ஏதாவது சம்பந்தமிருக்கிறதா என்பதை யோசிக்க வேண்டியிருக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் ‘மாற்றுகளைத் தேடி’ என்று ஒரு புத்தகம் வந்தது. மாற்றுக்கல்வி, மாற்று மருத்துவம், மாற்றுப் பண்பாடு ஆகியவை குறித்து பேசியது. பள்ளிகளுக்கு அப்பால் கல்வி, கல்வி நிலையத்தில் அதிகாரப்படிநிலை, பின் தங்கிய பின்னணியில் இருந்து வரும் மாணவர்கள் குறித்த பொதுச்சித்திரத்தைக் கறுப்பின மாணவர்கள் முதல் தலித் மாணவர்கள் வரை முன்வைத்துப் பேசுகிறது. ஆனால் 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ‘நவீன’ எழுத்தாளர், ‘அரசுப்பள்ளி மாணவர்கள் பொறுக்கிகள். அவர்களை அடித்து உதைப்பதற்கு ஆசிரியர்களுக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும்’ என்கிறார். ‘கண்ணைவிட்டுட்டு மற்ற எல்லாத்திலும் அடிச்சு தோலை உரிச்சுடுங்க’ என்று சொல்லும் சாமானியரின் குரலை எதிரொலிக்கும் எழுத்தாளரிடம் என்ன ‘நவீனம்’ இருக்கிறது? மரணதண்டனையை, என்கவுண்டரை, ராணுவ வன்முறையை ஆதரித்துக்கொண்டே ஒருவரால் காந்தியையும் பேச முடிகிறது என்றால் அது என்ன ‘நவீனம்?’

மொழியில் நிலவும் அதிகாரம் குறித்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு சிந்தித்தார் பெரியார். இன்று அதைப் பொதுச்சமூகமும் ஏன் அரசும்கூட ஏற்று திருநங்கை, மாற்றுத்திறனாளிகள் போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் ஒரு ‘நவீன’ எழுத்தாளரோ ”தேவடியா என்ற வார்த்தையை எப்படி பயன்படுத்தாமல் இருப்பது? அதை எடுத்துவிட்டால் தமிழ் அழிந்துவிடாதா?” என்கிறார். பல ‘நவீன’ எழுத்தாளர்கள் பெண்களை, பெண் எழுத்தாளர்களை, பெண் வாசகர்களை, பெண்ணியவாதிகளைக் கிண்டலடித்து எழுதுகிறார்கள். அத்தனையும் சாலமன் பாப்பையா, பட்டிமன்றம் ராஜா தரத்தைத் தாண்டாதவை. நவீனம் என்பதைச் சிந்தனைக்குள் உள்வாங்காதவர்கள் வெறுமனே மொழியின் வடிவத்தை மாற்றி நவீனம் என்று நீட்டுகிறார்கள். எனவே ‘நவீன கவிதையில் பெரியார் ஏன் இல்லை’ என்பதைச் சிந்திப்பதற்கு முதலில் கவிஞர்கள் நவீனமாகவும் தயாராக வேண்டும்.

ஆனால் இப்படி வெறுமனே விமர்சனங்களுடனோ தன்னளவில் திருப்தியடைந்துவிடுகிற பதில்களுடனோ முடித்துவிடுவது சரியானதில்லை. ‘பெரியாரை நவீனக்கவிதைக்குள் கொண்டுவர முடியுமா?’ என்ற சவாலை நான் ஏற்கிறேன். ‘ஜீன்ஸ் பெரியார்’ என்னும் என் குறுங்கதையும் அப்படியான ஒரு முயற்சிதான் (அது ‘நவீன’ இலக்கியமாக ‘நவீன’ இலக்கியவாதிகளால் ஏற்கப்படாது என்று தெரியும்)

அடுத்த ஆண்டு – 2023- பெரியார் இறந்து 50 ஆண்டுகள் ஆகின்றன. பெரியாரின் நினைவுப்பொன்விழா ஆண்டில் பெரியாரைப் பற்றி மட்டுமே எழுதப்பட்ட கவிதைகள் அடங்கிய தொகுப்பைக் கொண்டுவர முயல்கிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *