• Sun. Jun 15th, 2025
[smartslider3 slider="7"]

பா.ம.க யாருடன் கூட்டணி : மருத்துவர் ராமதாஸ் பரபரப்பு அறிக்கை

Byவிஷா

May 15, 2025

2026 சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாமக யாருடன் கூட்டணி வைக்கப் போகிறது என்பது குறித்து நாளை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக அக்கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
பாமக மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்டத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். நாளை காலை 10 மணிக்கு நடக்கும் இக்கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது..? பாமக மாநாடு மேடையில் இளைஞரணி தலைவர் முகுந்தனுக்கு இருக்கை வழங்கப்படாதது ஏன்..? என்பது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் போக்கு உருவானது. பாமக தலைவராக நானே இருப்பதாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அதிரடியாக அறிவித்திருந்தார். ஆனால், நான் நிர்வாகிகளால் தேர்வு செய்யப்பட்டவன் என்று கூறி அன்புமணி ராமதாஸ் பதிலடி கொடுத்திருந்தார். இருப்பினும், சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் மாநாட்டில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகிய இருவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர்.
இந்த மாநாட்டில் பாமக நிறுவனர் ராமதாஸ{ன் பேச்சு அக்கட்சியினர் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல் மாநாடு மேடையில் திலகபாமாவுக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், இளைஞரணி தலைவரான முகுந்தனுக்கு இருக்கை ஒதுக்கவில்லை. இது பாமக நிர்வாகிகளிடையே விவாதமாக மாறியது. இந்நிலையில் தான், பாமக மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.