• Wed. Mar 26th, 2025

அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முல்லைப் பெரியாறு 152 அடியாக உயர்த்தப்படும்.தேனி பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு

2026 ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும் என தேனியில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மதுராபுரியில் நடைபெற்றது. 

நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி  கலந்துகொண்டு விழாப் பேருரை ஆற்றியதுடன், ஏழை, எளிய மக்களுக்கு இலவச தையல் மிஷின்கள், கிரைண்டர், வேட்டி, சேலைகள் உள்ளிட்ட ஏராளமான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது, 
இன்றைக்கு இந்த கூட்டம் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. இதைப் பார்த்தால் சிலருக்கு காய்ச்சல் வந்து விடும்.  எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்களை முதல்வர்களாக உயர்த்தியது தேனி மாவட்டம்தான்.  இதன் மூலம் மாநிலத்துக்குத் தேவையான ஏராளமான திட்டங்களை அந்த தலைவர்கள் செயல்படுத்தி உள்ளனர். அதற்கு அடித்தளமிட்டது இந்த  மாவட்டம்தான்.  

இந்நிலையில் கடந்த 10ஆண்டு அதிமுக ஆட்சியில் என்ன செய்தார்கள் என்று ஸ்டாலின் கேட்கிறார். அவர் கொஞ்சம் வெளிச்சத்துக்கு வந்து பார்க்க வேண்டும்.
கடந்த 4ஆண்டுகளாக தேனி மாவட்டத்துக்கு திமுகஆட்சியில் ஒரு திட்டம் கூட கொண்டு வரவில்லை. ஆனால் அதிமுக.ஆட்சியில் அரசு ஐடிஐ. முதல் மருத்துவக்கல்லூரி, சட்டக்கல்லூரி, தேனி மாவட்டத்தில் 18ம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. 58 ஆம் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டது. பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டது.
கம்பத்திலிருந்து மதுரை மாவட்டத்திற்கு கூட்டுக் குடிநீர் திட்டம் தந்தது அதிமுக ஆட்சி. வீரபாண்டியில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டது இவ்வாறு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கிறோம்.
அ.தி.மு.க. ஆட்சி பொற்கால ஆட்சி என்று மக்கள் பாராட்டுகிறார்கள். அவ்வளவு திட்டங்களை கொடுத்து இருக்கிறோம். அதனால் இன்றைக்கு நாங்கள் நெஞ்சை நிமிர்த்தி உங்கள் முன் நிற்கிறோம்.
ஆனால், ஸ்டாலின் எப்போது பார்த்தாலும் போட்டோஷ{ட் நடத்திக் கொண்டிருக்கிறார்.
முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த சட்டப்போராட்டம் நடத்தியது அதிமுகதான். அணையை பலப்படுத்திவிட்டு 152 அடியாக நீர்மட்டத்தை உயர்த்தலாம் என்றும் உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றோம்.
அதன் பின்பு ஆட்சி மாறியது. இன்று வரை அந்த திட்டம் முழுமை பெறவில்லை.
இப்போது அனைத்திந்திய அண்ணா திமுக ஆட்சி நடந்திருந்தால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்பட்டிருக்கும். முல்லைப் பெரியாறு அணை என்பது ஐந்து மாவட்ட மக்களின் ஜீவாதாரம். இங்கே உள்ள விவசாயிகளும், தொழிலாளர்களும் இந்த முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை மட்டும் தான் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அனைத்திந்திய அண்ணா திமுக அரசு மீண்டும் உங்களால் தேர்ந்தெடுக்கப்படும். அப்போது அணையின் நீர்மட்டம் 152 அடியாக உயர்த்தப்படும்.
இன்றைக்கு திராவிட மாடல் அரசு என்று ஸ்டாலின் அடிக்கடி சொல்லிக் கொண்டு இருக்கிறார். இது திராவிட மாடல் அரசு இல்லை. ஸ்டாலின் மாடல் அரசுதான் இது.
இந்த ஆட்சி வந்த பிறகு தமிழகம் முழுவதும் போதைப்பொருள் விற்பனை அதிகரித்து விட்டது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே கஞ்சா உள்ளிட்ட பல்வேறு போதைப்பொருட்கள் மாநிலத்தில் அதிகரித்து விட்டது என்று எச்சரிக்கை விடுத்தேன். ஆனால் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
விளைவு, இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் கிடக்கிறது. இன்றைக்கு நடக்கும் பல குற்றங்களுக்கு போதையே காரணம். சிறுமி முதல் மூதாட்டி வரை அச்சப்படும் அளவுக்கு பாலியல் குற்றங்கள் அதிகரித்து விட்டன. பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் அப்பா அப்பா என்று அலறிக்கொண்டிருக்கின்றனர். அது ஏனோ ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கவில்லை.
கடந்த சில மாதத்தில் தமிழகம் முழுவதும் 184கொலைகள் நடந்துள்ளன. அதே போல் 273 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாகி உள்ளன.
காவல்துறை பெண் உயர்அதிகாரிக்குகூட பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. அதிமுகஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டு விட்டன. விவசாயிகள், மாணவர்கள், அரசு ஊழியர்கள் என்று பலதரப்பினருக்கும் போலியான வாக்குறுதிகளை அளித்து விட்டு திமுகஆட்சிக்கு வந்துள்ளன. ஆனால் 15சதவீத வாக்குறுதிகளை கூட அவர்கள் நிறைவேற்றவில்லை.
திமுகவை அகற்றுவதுதான் எங்கள் நோக்கம். அதிமுகவில்தான் கடைசி தொண்டன் கூட உயர்பொறுப்புக்கு வர முடியும். ஆனால் திமுகவில் வாரிசுகள்தான் தொடர்ந்து பதவிக்குவர முடியும்.
பெரியகுளத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார். நாங்கள் துரோகம் செய்தோம் என்று. ஜெயலலிதா இறந்து பதவி பறிபோனதும் தர்மயுத்தம் செய்தது யார். சட்டசபையில் அதிமுக ஆட்சியை கவிழ்க்க எதிர்த்து வாக்களித்தது யார். கட்சி சின்னத்தை முடக்க, கட்சியை வீழ்த்த செயல்பட்டுக் கொண்டிருப்பது யார். இதெல்லாம் சாதாரண தொண்டனுக்குக் கூட தெரியும்.
அதிமுக மூழ்கும்கப்பல் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதிமுக மூழ்கும் கப்பல் அல்ல. கரைசேரும் கப்பல், துரோகம் இழைத்த நீங்கள்தான் தற்போது கடலில் தத்தளிக் கொண்டிருக்கிறீர்கள்.
எப்போது பார்த்தாலும் சீனியர் சீனியர் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களை விட நான் சீனியர்தான். 89-லே சட்டமன்ற உறுப்பினர் ஆனவன். உங்களுக்கு சீக்கிரம் வாய்ப்பு கிடைத்தது. எங்களுக்கு தாமதமாக கிடைத்தது அவ்வளவுதான். அதிமுகவில் கூட்டணி கட்சிக்கு எனது தொகுதி ஒதுக்கப்பட்ட போதும் வேறு தொகுதியில் போட்டியிடாமல் சம்பந்தப்பட்ட வேட்பாளரை வெற்றி பெற வைத்தேன். அதுதான் விசுவாசம். பதவி இல்லை என்றதும் துரோகம் செய்யத் தொடங்கி விட்டீர்களே. நீங்களா விசுவாசி.

வரும் சட்டசபைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும். மீண்டும் இதே மேடையில் உங்களை எல்லாம் வந்து சந்திப்பேன்.
இவ்வாறு அவர் பேசினார்.தேனி கிழக்கு மாவட்டச் செயலாளர் முருக்கோடை ராமர் தலைமை வகித்தார். கழக அமைப்புச் செயலாளர்கள் எஸ்டிகே.ஜக்கையன், மகேந்திரன், கொள்கை பரப்பு துணைச் செயலாளர்கள் ரதிமீனாசேகர், முத்தையா, எம்ஜிஆர்.மன்ற துணைச்செயலாளர் மாணிக்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எதிர்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஆர்பி.உதயகுமார் வரவேற்றார்.
முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், செல்லூர் ராஜூ, மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் ராஜன் செல்லப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நகரச் செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றியச் செயலாளர்கள் லோகிராஜன், விடி.நாராயணசாமி, அன்னபிரகாஷ், ராஜகுரு உட்பட பலர் கலந்து கொண்டனர்.