கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் தேசிய நெடுஞ்சாலையை தரமாக செப்பனிடாததால் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் கைது.
கன்னியாகுமரி மாவட்டத்திற்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் பழுதடைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

காவல் கிணறு- களியக்காவிளை இடையிலான தேசிய நெடுஞ்சாலை மற்றும் பார்வதிபுரம் – கன்னியாகுமரி இடையிலான தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் நிலையில், அவற்றை சீர் செய்ய வேண்டும் என தொடர்ந்து பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், வடசேரி பகுதியில் இன்று தேசிய நெடுஞ்சாலையை செப்பனிடும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட்டு பணிகளை தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏற்கனவே அதிக அளவில் பழுதடைந்த நிலையில் அவற்றை தரமாக செப்பனிடல் பெயரளவில் பணிகள் நடைபெறுவதாக நாம் தமிழர் கட்சியினர் குற்றஞ்சாட்டினர்.
இதனால் பணிகள் தொடர முடியாத நிலையில் அங்கு விரைந்து வந்த வடசேரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பணிகளின் தரம் இல்லை என்பதால் பணிகளை தொடர முடியாது என போராட்டக்காரர்கள் கூறியதால் ஒப்பந்ததாரருக்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது
இதனால் தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பான நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 25க்கும் மேற்பட்டோரை வடசேரி போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். அதைத்தொடர்ந்து ஒப்பந்ததாரர் பணிகளை தொடர்ந்தார். பணிகளில் தரமில்லை என குற்றஞ்சாட்டியும் அதிகாரிகளை அதை நிவர்த்தி செய்யாமல் தொடர்ந்து பணி மேற்கொள்வது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.