2021-ம் ஆண்டுக்கான ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாடு வருகிற 31-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 12-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில் உலக நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டு பருவ நிலை மாற்றத்தை சமாளிப்பதற்கான முக்கியமான முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தநிலையில், ஐ.நா.வின் உலக வானிலை அமைப்பு, ‘தண்ணீருக்கான பருவநிலை சேவைகள் நிலை 2021’ என்கிற தலைப்பில் ஆய்வு ஒன்றை நடத்தி , உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டேரி தலாஸ் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், பருவநிலை மாற்றம், பெருவெள்ளம் மற்றும் வறட்சி போன்ற நீர் தொடர்பான ஆபத்துகளின் உலகளாவிய அபாயத்தை அதிகரிக்கிறது.
2018-ம் ஆண்டில் இருந்து 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்தார்கள். 2050-ம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறை சிக்கலை எதிர்கொள்வார்கள்.
எனவே கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர், நிலையான வளர்ச்சி, பருவநிலை மாற்றக் கொள்கைகளை கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாய குறைப்பு ஆகியவை உடனடியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
கடந்த 20 ஆண்டுகளில் நிலத்தின் மேற்பரப்பு மற்றும் நிலத்தடி நீர் சேமிப்பு, மண்ணின் ஈரப்பதம், பனி உறைதல் உட்பட அனைத்து நீரின் தொகுப்பும் ஆண்டுக்கு 1 செமீ என்ற விகிதத்தில் குறைந்துள்ளது.
உலகளவில் தண்ணீர் பாதுகாப்பு, சேமிப்பு மோசமான நிலையில் இருக்கிறது. உண்மையக் கூறுவதென்றால், பூமியில் உள்ள தண்ணீரில் 0.5 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படாமலும், சுத்தமான நீராகவும் இருக்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக தண்ணீரை அசுத்தப்படுத்துவது, அதானால் ஏற்படும் ஆபத்து அதிகரித்து வருகிறது.
கடந்த 2000-ம் ஆண்டிலிருந்து, பெருவெள்ளம் தொடர்பான பேரழிவுகள் 134 சதவீதம் அதிகரித்துள்ளன. பெரும்பாலான பொருளாதார ரீதியான மற்றும் மனித உயிரிழப்புகள் ஆசியாவில்தான் நடந்துள்ளன என்று அவர் அந்த ஆய்வில் கூறுகிறார்.