

தேனி மாவட்டம் வருஷாடு பகுதியில் தன்னார்வலர்கள் சார்பில் மாதந்தோறும் ஆதரவற்ற முதியோர்களுக்கு உணவு, உடை என, தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது.
வருஷநாடு பகுதியை சேர்ந்த கனிமொழி, திரைப்பட துறையைச் சேர்ந்த தேவிகா ஆகியோர் தலைமையில் 20 பேர் கொண்ட தன்னார்வலர்கள் குழு செயல்பட்டு வருகிறது. இக்குழுவினர் மாதந்தோறும் ஒன்று கூடி ஏதாவது ஒரு பகுதிக்கு சென்று அங்குள்ள ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு சென்று தன்னால் இயன்ற உதவிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறது. நேற்று வருஷாடு பகுதியில் முகாமிட்ட இக்குழுவினர் அங்கு சுற்றித் திரிந்த ஆதரவற்ற முதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு உணவு, உடை மற்றும் குளிருக்கு இதமான கம்பளி போர்வை வழங்கப்பட்டது. இவர்களின் சேவையை அப்பகுதி மக்கள் மட்டுமின்றி, போலீசாரும் வெகுவாக பாராட்டினர்.
இச்சேவை குறித்து கனிமொழி நம்மிடம் கூறுகையில், எனக்கு சிறுவயதில் இருந்தே இதுபோன்ற உதவி செய்யும் பழக்கம் இருந்ததால், இன்னும் அதை விடாமல் கடைபிடித்து வருகிறேன். எனக்கு உறுதுணையாக என் நண்பர்கள் இருந்து வருகிறார்கள். இதனால் மாதந்தோறும் என்னால் ஆதரவற்றோருக்கு உதவ முடிகிறது. கடந்த 2 ஆண்டுகளாக சேவை பணி தொடர்ந்து வருகிறது. இது எங்கள் குழுவிற்கு மன நிம்மதியை ஏற்படுத்தி வருகிறது, என்றார்.