• Thu. Apr 25th, 2024

விடிய.. விடிய.. தரிசனம்
வீரப்ப அய்யனார் கோயில்

மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தேனி வீரப்ப அய்யனார் கோயிலில் விடிய… விஷய… பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் ரம்மியமான சூழலில் அல்லி மாநகரின் மேற்கில் பனசல், நதிக்கரையில் எழுந்தருளி வேண்டுவோர் வேண்டிய வரங்களை தந்து அருள்பாலித்து வருகிறார், ஸ்ரீ வீரப்ப அய்யனார். இவர் தேனி நகர மக்களுக்கு காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறார். தேனி அல்லிநகரம் பிரிவு ரோட்டில் இருந்து சுமார் 8 கி.மீ., தொலைவில் மலையடிவாரப் பகுதியில் இக்கோயில் அமைந்துள்ளது. வழி நெடுக மா, தென்னை மரங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி கண்களுக்கு விருந்தாகும். பறவைகளின் இரைச்சல் சத்தம் எப்போதும் கேட்டுக் கொண்டே இருக்கும். வார நாட்களில் செவ்வாய், வெள்ளி அன்று பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும். மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, கோயில் வளாகம் முழுவதும் மின்னொளி அலங்காரத்தில் ஜொலித்தது. உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் குடும்பத்தோடு கூட்டம், கூட்டமாக வந்த வண்ணம் இருந்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 7:00 மணிக்கு மேல் அபிநயா பரதநாட்டிய பள்ளி மாணவிகளின் பரத நிகழ்ச்சி நடந்தது. இரவு முழுவதும் விடிய… விடிய….அன்னதானம் நடந்தது. இன்று காலை 8:00 மணிக்கு மேல் வீரப்ப அய்யனார் சுவாமி மலைக் கோயிலில் இருந்து புறப்பட்டு அல்லிநகரம் வந்தடைந்தார். இரவு சுவாமி புஷ்ப அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *