தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி மற்றும் வைகை அணை பகுதிகளில் மீன்கள் விற்பனை அதிகம் நடைபெறுகிறது. இந்நிலையில் குளிர்சாதன பெட்டிகளில் பல நாட்கள் வைத்து அதை மக்களுக்கு விற்பனை செய்வதாக நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு ஆட்சியர் முரளிதரன் உத்தரவிட்டார். இதனையடுத்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராகவன், மீன்வளத்துறை உதவி இயக்குனர் பஞ்சராஜா ஆகியோரின் தலைமையிலான அதிகாரிகள் குழு வைகை அணை, ஆண்டிப்பட்டி பகுதிகளில் செயல்படும் 30க்கும் மேற்பட்ட மீன் விற்பனை கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் குளிர்சாதன பெட்டிகளில் வைத்து கெட்டு போன மீன்களை விற்பனை செய்த கடைகளை கண்டறிந்து, வியபாரிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன் சுமார் 75 கிலோ வரையிலான கெட்டுப்போன மீன்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து, ரசாயன திரவம் ஊற்றி அழித்தனர்.இனி வரும் நாட்களில் இதுபோன்ற கெட்டுப்போன மீன்களை விற்பனை செய்தால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று வியாபாரிகளை அதிகாரிகள் எச்சரித்தனர்.