• Fri. Apr 26th, 2024

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலும் கட்சி தொண்டர்களின் பொலம்பலும்…

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி, ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த மாதம் 28ம் தேதி துவங்கியது. இதற்கிடையில் ஆளும் கட்சியான தி.மு.க.,- அ.தி.மு.க.,- தே.மு.தி.க.,- மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட முக்கிய கட்சி தலைவர்கள் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதில், குறிப்பாக தேனி மாவட்டத்தை பொறுத்தவரை பணம் இருந்தா ‘சீட்’ என அ.தி.மு.க., வினருக்கு கட்சி மேலிடம் கட்டளையிட்டுள்ளதால், மூத்த நிர்வாகிகள் பலர் ‘ஜஹா’ வாங்கிய பரிதாபம் இங்குதான் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில் செல்வாக்கு எல்லாம் தேவையில்லை. பணம் இருந்தால் போதும், என்ற அடிப்படையில் கணவன், மனைவிக்கு தாராள மனதுடன் ‘சீட்’ வழங்கியும் உள்ளனர். சிலருக்கு வேண்டா, விருப்பமாகவும் வழங்கியதை பார்த்த, மூத்த நிர்வாகிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். பல ஆண்டுகளாக கட்சிக்கு உழைத்தவர்கள், இன்னும் உழைத்து கொண்டு தான் இருக்க வேண்டுமா? அவர்கள் முன்னேற ஒரு வாய்ப்பு வழங்க வேண்டாமா? என மாவட்டத்தில் எங்கு பார்த்தாலும் கட்சி தொண்டர்களின் புலம்பல் ‘ரீங்காரமாக’ ஒலித்து வருகிறது. தேர்தல் முடிந்ததும் முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில் பலரும் கட்சித் தாவலில் ஈடுபடப் போவதாக ‘ரூமர்’ கிடைத்துள்ளது. ஒரு காலத்தில் தேனி மாவட்டம் ‘ அசைக்க முடியாத’ அ.தி.மு.க., கோட்டையாக இருந்தது. இதனால் பலரும் இங்கு போட்டி போட விருப்பம் தெரிவிப்பர். வெற்றி பெற்ற பலரும் அமைச்சர்களாக வலம் வந்ததை, காணமுடிந்தது. இப்படிப்பட்ட ‘வலிமை’ வாய்ந்த கட்சியின் நிலைமை காலப்போக்கில் தலைகீழாக மாறிப்போனது. கடந்த சட்டசபை தேர்தலில் பெரும்பாலான இடங்களை ஆளும் கட்சியான தி.மு.க., கைப்பற்றியது. நகராட்சிகளுக்கு 177 வார்டு உறுப்பினர்கள் மற்றும் 22 பேரூராட்சிகளுக்கு 336 வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *