பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி சசிகலாவை இன்று சந்தித்து பேசினார். ஆனால் அரசியல் ரீதியாக ஏதும் பேசவில்லை எனவும், மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும் சென்னையில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தமிழகம் வந்த பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் விஜயசாந்தி, சென்னை தியாகராய நகரில் உள்ள சசிகலா இல்லத்தில் நேற்று அவரை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயசாந்தி, சென்னை வந்தால் சசிகலாவை எப்போதும் சந்திப்பேன்எங்கள் நட்பு எப்போதும் தொடரும் என்றார்.
மேலும் நான் அவர்கள் வீட்டு பெண்போல் என்று பேசிய அவர், ஜெயலலிதா, சசிகலா இருவரையும் தமக்கு பிடிக்கும் எனவும், தமிழகத்திற்கு வந்த பணிகள் அனைத்தும் முடிந்ததால் இறுதியாக சசிகலாவை இன்று சந்தித்தேன் என்றும், அரசியல்ரீதியாக சசிகலாவிடம் ஏதும் பேசவில்லை, நட்பு ரீதியான சந்திப்பு மட்டுமே என்றும் தெரிவித்தார். அரசியலில் யார் யார் நல்லது செய்தார்களோ, அவர்களுக்கு நல்லது நடக்கும். தமிழகத்தை பொறுத்தவரை ஜெயலலிதா தற்போது இருந்திருந்தால் நல்லது நடந்திருக்கும். அரசியலில் ஜெயலலிதா, சசிகலா இருவரும் கஷ்டப்பட்டு வந்தவர்கள். அரசியலில் நாளை எது வேண்டுமானாலும் நடக்கலாம், அது நல்லதே நடக்கும் என்று கூறிய அவர், தஞ்சை மாணவி விவகாரம் தொடர்பாக சசிகலாவிடம் ஏதும் பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.