• Sat. Mar 22nd, 2025

கல்வியை அரசியலாக்க வேண்டாம் – மு.க.ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் கடிதம்

ByP.Kavitha Kumar

Feb 21, 2025

கல்வியை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கடிதம் எழுதியுள்ளார்.

மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் நிதி என்ற மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க மத்திய அரசு முயற்சி செய்கிறது என்று கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் வரும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தர்மேந்திர பிரதான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி திமுக மாணவர் அமைப்பு முற்றுகை போராட்டத்தை பிப்.25-ம் தேதி அறிவித்துள்ளது.

இந்த நிலையில், தமிழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நலன் கருதி, ‘சமக்ர சிக் ஷா’ திட்டத்தின்கீழ் ரூ.2,152 கோடி நிதியை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கடிதம் எழுதியிருந்தார்.

இந்த நிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “கல்வியை அரசியலாக்க வேண்டாம் . மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய கல்விக் கொள்கை குறித்து ஆராயுங்கள்.” என்று குறிப்பிட்டு கடிதம் எழுதியுள்ளார்.அதில், “நமது நாட்டின் கல்வி முறையின் எதிர்காலம் குறித்த அக்கறையுடன் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நமது மாணவர்களின் நலனுக்காக கல்வியை அரசியலாக்க வேண்டாம். தேசிய கல்விக்கொள்கையை குறுகிய பார்வையுடன் பார்ப்பது பொருத்தமற்றது.

தாய்மொழியில் தரமான கல்வி பெறுவதை தேசிய கல்விக்கொள்கை உறுதி செய்கிறது. தேசிய கல்விக்கொள்கை நமது மொழியியல், கலாச்சார பன்முகத்தன்மையை பாதுகாக்க அமல்படுத்தப்படுகிறது. எந்த மொழியையும் திணிக்கும் பேச்சுக்கு இடமில்லை. பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களும் தேசிய கல்விக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.