


இந்தியை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக பிப்ரவரி 25-ம் தேதி தமிழ்நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று திமுக மாணவர் அணி அறிவித்துள்ளது.
இதுகுறித்து திமுக மாணவர் அணி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரின் பிறந்த நாளான இளைஞர் எழுச்சி நாளை தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக மாணவர் அணியினர் எழுச்சியுடன் கொண்டாடுவோம். மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்எஸ்எஸ் – பாஜக அரசின் சதித் திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்வோம்.

ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம் நடத்தப்படும். தமிழ்நாட்டின் இரும்பின் தொன்மை வரலாற்றை உலகிற்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

